’5வயதில் மகள், மனைவி 7மாத கர்ப்பம்’ இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதலில் கேரள நபர் மரணம்! இந்தியர்கள் நிலை?!

’இஸ்ரேல் அதிகாரிகள் தனது மகனை பாதுகாப்பான பகுதிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை’ என ஏவுகணை தாக்குதலில் பலியான மகனின் தந்தை ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார்.
இஸ்ரேல் - இந்தியா
இஸ்ரேல் - இந்தியாட்விட்டர்

5 மாதங்களாக நடைபெறும் இஸ்ரேல் - காஸா போர்

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை காஸா நகர் மீது தாக்குதல் நடத்திவருகிறது. குறிப்பாக, வடக்கு காஸாவிற்குள் தாக்குதல் நடத்தி முன்னேறிய இஸ்ரேல் ராணுவம், அங்கு முக்கியப் பகுதிகளையும் கைப்பற்றியது. மேலும் தெற்கு காஸாவிலும் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது. முற்றிலும் காஸாவை அழிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இஸ்ரேல் ராணுவம், காஸாவின் தெற்குப் பகுதி தவிர எகிப்து எல்லையையொட்டி அமைந்துள்ள ராஃபாவிலும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திவருகிறது. பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்காவிட்டால், ரமலான் மாதம் தொடங்குவதற்குள் ராஃபா நகரில் தரைவழித் தாக்குதல் நடத்தப்படலாம் என தெரிகிறது.

70க்கும் மேற்பட்டோரைச் சுட்டு வீழ்த்திய இஸ்ரேல் ராணுவம்

இருதரப்பு போரை நிறுத்தக்கோரி பல்வேறு நாட்டுத் தலைவர்கள், உலகளாவிய அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இருந்தும் இன்னும் காஸாவில் போர் சத்தம் ஓய்ந்தபாடில்லை. இதனால் உயிர்ப்பலிகள் அதிகரித்து வருவதுடன், காஸா மக்களுக்கு அடிப்படை உணவான மாவும், தண்ணீரும் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த வாரம் காஸா நகரத்தில் உணவுப் பொருட்களுக்காகக் காத்திருந்தபோது, அங்கு உணவு கொடுக்க வந்த டிரக்கை ஆயிரக்கணக்கானோர் சூழ்ந்துகொண்ட காட்சியும், அப்போது அவர்கள் மீது இஸ்ரேல் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 70க்கும் அதிகமானோர் பலியானதும் உலக அளவில் பரபரப்பை ஏற்பத்தியது.

இஸ்ரேலின் தாக்குதலில் பலியான கேரள இளைஞர்

இந்த நிலையில், வடக்கு இஸ்ரேலின் மார்காலியோட் பகுதியில் ஒரு விவசாய நிலப் பகுதியில் கடந்த 4ஆம் தேதி நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். அவர், கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பாட்நிபின் மேக்ஸ்வெல் என விசாரணையில் தெரிய வந்தது. தவிர, மேலும் கேரளாவைச் சேர்ந்த இருவர் இந்தத் தாக்குதலில் காயமடைந்தனர். அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பலியான மேக்ஸ்வெல்லின் தந்தை பாத்ரோஸ் மேக்ஸ்வெல் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், ’இஸ்ரேல் அதிகாரிகள் தனது மகனை பாதுகாப்பான பகுதிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

பாட்நிபின் மேக்ஸ்வெல், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் ஒப்பந்தத்தின்பேரில் இஸ்ரேலுக்குச் சென்று பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்தார். அவருக்கு 5 வயதில் மகள் ஒன்று இருக்கும் நிலையில், அவருடைய மனைவி தற்போது 7 மாத கர்ப்பிணியாகவும் உள்ளார். இந்தச் சூழலில் அவர் ஏவுகணை தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது அவருடைய குடும்பத்தை மிகவும் வருத்தமடைச் செய்துள்ளது.

பாதுகாப்பை உறுதிசெய்த இந்திய தூதரகம்

இதையடுத்து, இஸ்ரேலில் பணிபுரியும் இந்தியர்கள், குறிப்பாக எல்லைப் பகுதிகளில் உள்ள இந்தியக் குடிமக்கள் நாட்டிற்குள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயருமாறு இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுரை வழங்கியிருந்தது. மேலும், இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, இஸ்ரேல் அதிகாரிகளுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றி வருவதாகவும் தூதரகம் தெரிவித்திருக்கிறது. இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதாகவும் தூதரகம் விளக்கமளித்துள்ளது. இந்தியர்களுக்காக 24/7 தொலைபேசி எண்களையும் தூதரகம் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலில் பணிபுரியும் 20,000 இந்தியர்கள்!

இஸ்ரேலில் 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிப்பதாகக் கூறப்படுகிறது. வேலைக்காகப் பிழைப்புத் தேடிச் சென்றவர்களே அதிகம். இன்னும் சொல்லப்போனால், கடந்த ஜனவரி மாதம் வட இந்திய இளைஞர்கள் பலர் மாதம் 1 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுவதற்காக ஹரியானா வேலைவாய்ப்பில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது சிலர், ’இஸ்ரேலில் பாதுகாப்பற்ற சூழல் இருந்தால் இந்திய அரசு எங்களை எப்படி அங்கு அனுப்ப சம்மதிக்கும். எனவே, நாங்கள் பாதுகாப்பான இடத்தில் பணியமர்த்தப்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’ எனவும், ’இங்கு வேலைவாய்ப்புக்கு வழியில்லை. அதனால்தான், இங்கிருந்து வெளியேற விரும்புகிறோம். ஒருவேளை, சாவதுதான் நம்முடைய விதியென்றால், அது இஸ்ரேலில் நடந்தால் என்ன, இந்தியாவில் நடந்தால் என்ன’ என கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, குண்டுவீச்சில் சேதமடைந்திருக்கும் இஸ்ரேலில் நர்சிங் மற்றும் கட்டுமானத் துறைகளில் 10,000 இந்தியர்கள் பணியாற்ற அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி, போர்ச் சூழலுக்கு நடுவேயும் உயிரைப் பற்றிக் கவலைப்படாது இஸ்ரேலுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துவருகிறது.

இஸ்ரேல் - இந்தியா
’சாவதுதான் விதியென்றால் அது எங்கு நடந்தால் என்ன’-வேலைக்காக இஸ்ரேல் செல்லும் ஹரியானா இளைஞர்கள் வேதனை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com