கனடா | அதிருப்தியில் தனது நாற்காலியைத் தூக்கிச் சென்ற ட்ரூடோ.. பயனர்கள் எதிர்வினை!
கனடாவில் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அந்நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பியதுடன், அவருக்கு ஆதரவு அளித்து வந்த என்.டி.பி. கட்சியும் தனது ஆதரவை விலக்கிக் கொண்டது. இதையடுத்து அவருக்கு நெருக்கடி அதிகரித்தது. மேலும், அவரது சொந்த லிபரல் கட்சிக்குள்ளேயே அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நிலையில், லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்த ட்ரூடோ, கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். என்றாலும், அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படும்வரை தொடர்ந்து பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், கனடாவின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்தெடுக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் பதவியேற்க உள்ளார். இந்த நிலையில், புதிய பிரதமராக பதவியேற்க உள்ள மார்க் கார்னியை ஜஸ்டின் ட்ரூடோ இன்று சந்தித்தார். இருவரும் சில மணி நேரம் ஆலோனை நடத்தினர். தனது பதவிக்காலம் முடிவடைவதால் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய ஜஸ்டின் ட்ரூடோ, நாடாளுமன்றத்தில் இருந்து தனது நாற்காலியுடன் நாக்கை நீட்டியபடி வெளியேறினார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பயனர்கள் பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.