கனடா | புதிய பிரதமர் தேர்வு.. தொடக்கமே அதிரடி.. யார் இந்த மார்க் கார்னி?
கனடாவில் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அந்நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், அவருக்கு ஆதரவு அளித்து வந்த என்.டி.பி. கட்சியும் தனது ஆதரவை விலக்கிக் கொண்டது. இதையடுத்து அவருக்கு நெருக்கடி அதிகரித்தது. மேலும், அவரது சொந்த லிபரல் கட்சிக்குள்ளேயே அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நிலையில், லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்த ட்ரூடோ, கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். என்றாலும், அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படும்வரை தொடர்ந்து பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், கனடாவின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்தெடுக்கப்பட்டுள்ளார். லிபரல் கட்சித் தலைவரான சச்சித் மெஹ்ரா, லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் முன்னாள் மத்திய வங்கித் தலைவரான மார்க் கார்னியின் வெற்றிபெற்றதாக அறிவித்தார். லிபரல் கட்சியின் தலைவராக ட்ரூடோவுக்குப் பிறகு பதவியேற்க கார்னி முன்னணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லிபரல் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ட்ரூடோவுக்குப் பிறகு புதிய பிரதமராகவும், அக்கட்சியின் தலைவராகவும் மார்க் பதவியேற்கவிருக்கிறார். முன்னதாக, லிபரல் கட்சித் தலைமைப் போட்டியில் மார்க் கார்னி 1,31,674 வாக்குகளைப் பெற்றார், இது மொத்த வாக்குகளில் சுமார் 85.9 சதவீதமாகும். அவரை எதிர்த்து போட்டிட்டவர்களான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் 11,134 வாக்குகளையும், கரினா கோல்ட் 4,785 வாக்குகளையும், பிராங்க் பேலிஸ் 4,038 வாக்குகளையும் பெற்றிருந்ததனர்.
அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னி, “நீங்கள் பல ஆண்டுகளாக எனக்கு உத்வேகம் அளித்தீர்கள். இப்போது உங்கள் நிதிப் பொறுப்பு, சமூக நீதி மற்றும் சர்வதேச தலைமைத்துவ பாரம்பரியத்தைத் தொடர ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போதைய தருணத்தில், கனேடிய மக்களுக்கு தேவைப்படுவது கனடாவுக்காக நிற்பது மட்டுமே. லிபரல் கட்சி வலுவாகவும் ஒற்றுமையாகவும் உள்ளது. சிறந்த தேசத்தைக் கட்டியெழுப்ப போராடத் தயாராக உள்ளோம். புதிய அரசாங்கம், வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஒரு புதிய திட்டத்தை அமல்படுத்தும். அமெரிக்க அதிபர் ட்ரம்புவை வெற்றிபெற விட மாட்டோம். அமெரிக்கா கனடாவுடன் கைகோர்த்து சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகத்திற்கான உறுதிமொழிகளைக் கொடுக்கும்வரை பழிவாங்கும் நடவடிக்கைகள் நடைமுறையில் இருக்கும். அமெரிக்கர்கள் நமது வளங்கள், நமது நீர், நமது நிலம், நமது நாட்டை விரும்புகிறார்கள். சற்று யோசித்துப் பாருங்கள். அவர்கள் வெற்றி பெற்றால், அவர்கள் நம் வாழ்க்கை முறையையே அழித்துவிடுவார்கள். அமெரிக்கா கனடா அல்ல... கனடா, ஒருபோதும் எந்த வகையிலும், வடிவத்திலும், வடிவத்திலும் அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்காது” என்றார்.
யார் இந்த மார்க் கார்னி?
மார்க் கார்னி, தொலைதூர வடமேற்கு பிரதேசங்களில் உள்ள ஃபோர்ட் ஸ்மித்தில் பிறந்தார். ஹார்வர்டில் கல்வி பயின்றார். அங்கு அவர் ஒரு நட்சத்திர ஐஸ் ஹாக்கி வீரராகவும் விளங்கினார். பின்னர், 2008 முதல் 2013 வரை கனடா வங்கியின் 8வது ஆளுநராகப் பணியாற்றியுள்ளார். 2011 முதல் 2018 வரை நிதி நிலைத்தன்மை வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை சமாளிக்க மிகவும் நம்பகமான அரசியல்வாதியாக நாட்டு மக்கள் அவரை அங்கீகரிப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.