4 நாட்களாக நடந்த மீட்புப்பணி... எரிமலை ராட்சத பள்ளத்தாக்கில் தவறி விழுந்த இன்ஸ்டா பிரபலம்!
12,224 அடி உயரத்தில், இந்தோனேசியாவின் இரண்டாவது உயரமான எரிமலை சிகரம் ரிஞ்சானி மலை. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் 3,726 மீட்டர் உயரமுள்ள இந்த எரிமலையைப் பார்வையிடுகின்றனர். இப்படி புகழ்ப்பெற்ற சுற்றுலாத் தளமாக இருக்கிறது ரிஞ்சானி எரிமலை.
இந்தநிலையில்தான், பிரேசில் நாட்டை சேர்ந்தவ ஜூலியானா மரின்ஸ் (வயது 26) தனது நண்பர்கள் குழுவோடு இந்த எரிமலை சிகரத்திற்கு சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளார். இன்ஸ்டாகிராம் பிரபலமான இவர் வெளிநாடுகளுக்கு சென்று வீடியோ பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இவரை சுமார் 3½ லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இந்தவகையில், கடந்த 21 ஆம் தேதி தனது நண்பர்கள் குழுவுடன் இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்றார்.
தொடர்ந்து அங்குள்ள 3,726 மீட்டர் உயரம் கொண்ட எரிமலை சிகரமான மவுண்ட் ரின்ஜானிக்கு சாகசக்குழுவினரோடு மலையேற்ற சாகசத்தில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக எரிமலையில் இருந்து ராட்சத பள்ளத்தாக்கில் சுமார் 600 அடியில் தவறி விழுந்தார்.
இந்தோனேசிய தீவான லோம்போக்கில் அமைந்துள்ள இந்த எரிமலை 12,000 அடிக்கும் அதிகமான உயரம் கொண்டது. குனுங் ரிஞ்சானி தேசிய பூங்கா அளித்த தகவலின் அடிப்படையில், உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணியளவில் இந்த துயர சம்பவம் நடந்திருக்கிறது. இதுகுறித்து தகவலறிந்த பேரிடர் மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இந்தநிலையில், டிரோன் மூலமாக அவர் இருக்கும் இடத்தை மீட்பு பணியினர் கண்காணித்தனர். அப்போது, மண்ணில் சிக்கி அவர் உயிருக்கு போராடி வந்ததும், எப்படியாவது காப்பாற்றும்படி மரியன்ஸ் அலறிய சத்தமும் கேட்டுள்ளது.
இதனால், தொடர்ந்து கயிறு கட்டி கீழே இறங்கி அவரை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். ஆனால், அவர் மென்மையான மணலில் சிக்கிக்கொண்டதால் கயிறுகளை கொண்டு காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. மேலும், எரிமலையை மூடிய அடந்த பனி காரணமாகவும், சாதகமற்ற வானிலை காரணமாகவும் மீட்பு நடவடிக்கைகள் தாமதமடைந்தன.
இப்படி தொடர்ந்து போராடியநிலையில், ஜூலியானா உடலை 4 நாட்களுக்கு பிறகு மீட்டுள்ளனர் . ஆனால், அவர் இரண்டு நாட்களுக்கு முன்பே இறந்துவிட்டதும் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து பிரேசில் அரசாங்கம் தரப்பில் தெரிக்கையில், "சாதகமற்ற வானிலை, நிலப்பரப்பு ஆகியவற்றின் காரணமாக, நான்கு நாட்களுக்கு பிறகு இந்தோனேசியாவின் தேடல் மற்றும் மீட்பு குழுவினர் பிரேசிலிய சுற்றுலாப் பயணியின் உடலைக் கண்டுபிடித்தனர்" என்று தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, கடந்த மாதம் ஒரு மலேசிய பார்வையாளர் உட்பட பலர் அங்கு மலையேற்றம் செய்யும் போது மரணமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.