முடிவுக்கு வந்த 1901 நாட்கள் சிறைவாசம்! விடுதலை ஆனார் ஜூலியன் அசாஞ்சே - வழக்கின் பின்னணி என்ன?

அமெரிக்க ராணுவ ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் அதன் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து ’விக்கி லீக்ஸ்’ (WikiLeaks) நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பிரிட்டன் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
ஜூலியன் அசாஞ்சே
ஜூலியன் அசாஞ்சேஎக்ஸ் தளம்

கடந்த 2010ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்களின்போது அமெரிக்கா மேற்கொண்ட போர்க் குற்றங்கள், ஊழல் தொடர்பான ஆயிரக்கணக்கான ரகசிய ஆவணங்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டது. இது அமெரிக்க ராணுவ வரலாற்றில் மிகப்பெரிய பாதுகாப்பு மீறல்கள் ஆகும். அமெரிக்காவை உளவு பார்த்தது, ராணுவ ரகசியங்களை திருடியது உட்பட 17 குற்றச்சாட்டுகளை அசாஞ்சே மீது அந்த நாட்டு அரசு சுமத்தியது. இதன் காரணமாக அதன் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சேவை குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்தது.

அமெரிக்கா இவர்மீது நடவடிக்கை எடுப்பதற்குமுன்பே, இவர் பிரிட்டன் நாட்டில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். ஜூலியன் அசாஞ்சே சில ஆண்டுகள் அங்கேயே இருந்து வந்தார். இருப்பினும், கடந்த 2019இல் அவருக்கு அளித்துவந்த அடைக்கலத்தை ஈகுவடார் அரசு வாபஸ் பெற்றது.

இதையடுத்து அப்போதே பிரிட்டன் போலீசார் அவரை கைதுசெய்தனர். அதன் பிறகு அவர் தெற்கு லண்டனில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று அவரை நாடு கடத்த, இங்கிலாந்து அரசு கடந்த 2022ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. இருப்பினும், ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டால் அவருக்கு அங்கே மரண தண்டனை விதிக்கப்படாது என்பதை அமெரிக்கா உறுதியளிக்க வேண்டும் என்று ஜூலியன் அசாஞ்சே தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதற்கிடையே, தான் செய்த தவறை ஒப்புக்கொண்டதால் ஜூலியன் அசாஞ்சே இங்கிலாந்தில் உள்ள பெல்மார்ஷ் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். லண்டன் உயர் நீதிமன்றம் ஜாமீன் அளித்த நிலையில், அவர் விடுதலையானார். தவறை ஒப்புக் கொண்டதால் அமெரிக்காவும் அவருக்குக் குறைவான தண்டனையை வழங்க ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க: ‘இவர் ரூ.150-க்கு கிடைப்பார்’ - வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணிகளுக்கு விலை வைத்து வீடியோ! இளைஞர் கைது

ஜூலியன் அசாஞ்சே
அமெரிக்கா - இஸ்ரேல் நட்பின் ரகசியம்.. கண்மூடிக்கொண்டு ஆதரிக்க காரணம் என்ன?.. வரலாறு என்ன சொல்கிறது?

இதை விக்கி லீக்ஸ் தரப்பும் உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக அது தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "ஜூலியன் அசாஞ்சே விடுதலையானார். 1901 நாட்கள் சிறையில் கழித்த பின்னர், பெல்மார்ஷ் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்" எனப் பதிவிட்டுள்ளது.

52 வயதான அவர் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆவணங்களை வெளியிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் நாளை, (ஜூன் 26) அமெரிக்காவில் ஆஜராக இருக்கிறார். அங்கே அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்ட குற்றத்திற்காக ஜூலியனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே ஜூலியன், பிரிட்டனில் 5 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்ட நிலையில், அது கழிக்கப்படும் எனத் தெரிகிறது. எனவே, அவர் இனிமேல் சிறையில் இருக்கத் தேவையில்லை. இதனால் அவர் விரைவில் தனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல உள்ளார். ஜூலியனின் இந்த விடுதலையை அவர்கள் குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர்.

இதையும் படிக்க: கனடா| பகுதி நேர வேலைக்காக காஃபி ஷாப் முன்பு நீண்ட வரிசையில் காத்திருக்கும் வெளிநாட்டு மாணவர்கள்!

ஜூலியன் அசாஞ்சே
திடீர் பயணமாக உக்ரைன் சென்றார் ஜோ பைடன்! கடைசி நிமிடம் வரை காக்கப்பட்ட ரகசியம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com