அமெரிக்கா - இஸ்ரேல் நட்பின் ரகசியம்.. கண்மூடிக்கொண்டு ஆதரிக்க காரணம் என்ன?.. வரலாறு என்ன சொல்கிறது?

1949 - 1965 காலகட்டத்தில் இஸ்ரேலுக்கு சுமார் 6.3 கோடி அமெரிக்க டாலர்களை கொடுத்திருந்தது அமெரிக்கா. இந்த உதவி அடுத்தடுத்த காலங்களில் அதிகரித்து, தற்போது ஆண்டுக்கு 300 கோடி டாலர்களை இஸ்ரேலுக்கு கொடுத்து வருகிறது அமெரிக்கா.
usa - israel ally
usa - israel ally file image

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்து வரும் போரில் இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் அமெரிக்கா.. எப்போது தொடங்கியது இஸ்ரேல் - அமெரிக்க நாடுகளின் உறவு? இஸ்ரேலுக்கு ஏதாவது ஒன்று என்றால் அமெரிக்கா ஓடோடி வந்து உதவுவது ஏன்? இஸ்ரேலை ஆதரிப்பதில் அமெரிக்க ஜனாதிபதிகள் நிர்பந்திக்கப்படுகிறார்களா? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடைதேடி பயணிக்கிறது இந்த சிறப்புத் தொகுப்பு.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தற்போது நடந்து வரும் போரில், இஸ்ரேலுக்கே நேரடியாக சென்று தனது ஆதரவை தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். அமெரிக்கா எப்போதும் இஸ்ரேலுடன் நிற்கும் என்றும் வாக்களித்துள்ளார். இப்போது மட்டுமல்ல, அமெரிக்கா - இஸ்ரேல் இடையேயான உறவு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனித்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

usa - israel ally
காஸாவை கட்டுக்குள் கொண்டு வந்த இஸ்ரேல்? ஹமாஸுக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி?

பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேல் எனும் தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்று முன்மொழியப்பட்ட பால்ஃபர் ஒப்பந்தம் 1917ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து, இஸ்ரேல் எனும் நாடு உருவாக வேண்டும் என்பதை அமெரிக்காவும் ஆதரித்தது. இரண்டாம் உலகப்போர் முடிந்த காலத்தில், சோவியத் யூனியன் ஒரு பக்கம் வலிமையாக நிற்க, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் மற்றொரு அணியாக நின்றது.

எண்ணெய் வளங்கள் மற்றும் சூயஸ் கால்வாய் என்று உலகப்பொருளாதாரத்தின் அடிநாதமாக விளங்கும் மத்திய கிழக்கில் தனது ஆதிக்கம் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்ததே, இஸ்ரேலை அமெரிக்கா ஆதரிக்க முக்கிய காரணமாகும். இன்னொரு காரணம் என்னவெனில், மத்திய கிழக்கில் சோவியத் யூனியனின் ஆதிக்கம் என்றும் இருக்கக்கூடாது என்று முடிவெடுத்ததாகும்.

உண்மையில், அமெரிக்க அதிபராக ஆசைப்படும் யாராக இருந்தாலும், இஸ்ரேலை ஆதரித்தால் மட்டும்தான் அது சாத்தியம். அவ்வளவு ஏன், நாடாளுமன்ற உறுப்பினராகக்கூட இஸ்ரேல் ஆதரவு அவசியம். அந்த அளவுக்கு அமெரிக்காவில் வலுப்பெற்று நிற்கிறது யூதர்களின் ஆதிக்கம்.

தனிப்பட்ட உதவி தொடங்கி, அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் பெரும் நிறுவனங்கள் உட்பட பல யூத அமைப்புகளும், இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தருவதை நிலைநிறுத்தி வருகிறது.

இஸ்ரேல் எனும் நாடு உருவாக வேண்டும் என்று வெளியான பால்ஃபர் பிரகடனத்தை அமெரிக்கா ஆதரித்தாலும், 1932 - 1945 ஆண்டு காலத்தில் அமெரிக்காவின் அதிபராக இருந்த ரூஸ்வெல்ட் காலத்தில், அமெரிக்காவிற்குள் யூத எதிர்ப்பு வலுவாக இருந்தது. ஆனால், அவரது மறைவைத் தொடர்ந்து, ட்ரூமன் அதிபராக பதவியேற்றார். 1948ல் இஸ்ரேல் உருவாகிவிட்டதாக, பென் குரியன் அறிவித்தபோது, 11 நிமிடங்களில் இஸ்ரேலை அங்கீகரிப்பதாக அறிக்கை வெளியிட்டார் அப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரூமன். அந்த நொடி முதல் தற்போது வரை இஸ்ரேல் - அமெரிக்கா உறவு வலுவாக நீடித்து வருகிறது.

1960களின் மத்தியில் இஸ்ரேல் அணு ஆயுதத்தை உருவாக்கி வருகிறது என்று இருநாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது. ஆனால், 1967ல் நடந்த ஆறு நாள் போரில், சிரியா, ஜோர்டான் மற்றும் எகிப்தை இஸ்ரேல் வீழ்த்திய பிறகு, அமெரிக்கா உடனான அதன் உறவு மேலும் வலுப்பெற்றது.

usa - israel ally
குழந்தைகளின் சுடுகாடாக மாறும் காஸா.. இந்த துயரத்திற்கு ஒரு முடிவேயில்லையா.. போர் நிறுத்தம் எப்போது?

1949 - 1965 காலகட்டத்தில் இஸ்ரேலுக்கு சுமார் 6.3 கோடி அமெரிக்க டாலர்களை கொடுத்திருந்தது அமெரிக்கா. இந்த உதவி அடுத்தடுத்த காலங்களில் அதிகரித்து, தற்போது ஆண்டுக்கு 300 கோடி டாலர்களை இஸ்ரேலுக்கு கொடுத்து வருகிறது அமெரிக்கா. இத்தனை கோடி டாலர் உதவியை தங்கள் நாட்டிலிருந்து இஸ்ரேல் பெறுகிறது என்பதே பல அமெரிக்கர்களுக்கு தெரியாது என்பது வேறு கதை.

அமெரிக்காவில் இருக்கும் யூத கழகங்களில் வற்புறுத்தல் மற்றும் ஆதிக்கம் ஆகியவற்றின் காரணமாக, இஸ்ரேலை கண்மூடித்தனமாக ஆதரிக்கிறது அமெரிக்கா. இதனால், மத்திய கிழக்கில் இஸ்ரேலின் கையும் ஓங்கி நிற்கிறது. இஸ்ரேல், அமெரிக்காவின் 51வது மாநிலம் என்றும் சிலர் கேலியாக குறிப்பிடுவதுண்டு. அந்த அளவுக்கு இஸ்ரேல் - அமெரிக்கா இடையான உறவு பலமானதாக இருந்து வருகிறது.

மத்தியக்கிழக்கில் தனக்கொரு நேச நாடு, ஆதிக்க சக்தி வேண்டும் என்று அமெரிக்கா முடிவெடுத்ததும், அமெரிக்காவின் அரசியலில் யூதர்களின் ஆதிக்கமும் இருநாடுகளின் உறவில் பிரச்னை இல்லாமல் நீடிக்க வைக்கின்றன. இந்த சமரச உறவால், இஸ்ரேலை அமெரிக்கா தட்டிக்கேட்க முடியாமல் இருந்து வருகிறது. சில வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி, இஸ்ரேல் - அமெரிக்க உறவு இப்போதைக்கு மாறப்போவதில்லை. அதனால், பாலஸ்தீனர்களுக்கு நியாயம் கிடைக்கப்போவதில்லை என்பதே கசப்பான உண்மையாகும்.

எழுத்து: யுவபுருஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com