ஜோ பைடன் வந்தாச்சு... 5 லட்சம் இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்க வாய்ப்பு.!
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கவிருக்கும் ஜோ பைடன் நிர்வாகம், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஜோ பைடன் தேர்தல் பிரச்சாரத்தின்போது வெளியிடப்பட்ட தேர்தல் வாக்குறுதியில் "இந்தியாவிலிருந்து 5,00,000 க்கும் அதிகமானோர் உட்பட கிட்டத்தட்ட 11 மில்லியன் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கு அமெரிக்க குடியுரிமைக்கான ஒரு வரைவை வழங்குவோம் என்றும், ஆண்டுதோறும் அமெரிக்காவில் 95,000 அகதிகளின் குறைந்தபட்ச ஏற்பு எண்ணிக்கையை நிறைவேற்றும் வகையிலும் செயல்படும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
பைடன் நிர்வாகம், குடும்ப அடிப்படையிலான குடியேற்றத்தை ஆதரிக்கும் மற்றும் குடும்ப ஒற்றுமை என்பது அமெரிக்காவின் குடிவரவு அமைப்பின் முக்கிய கொள்கையாக பாதுகாக்கும் என கூறப்பட்டுள்ளது. “மேலும் வருடாந்த அகதிகள் ஏற்பு சேர்க்கை இலக்கை 125,000 ஆக உயர்த்தி நிர்ணயிப்பதன் மூலம் இந்த நாட்டிற்கு நாங்கள் வரவேற்கும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்" என கொள்கை ஆவணம் கூறியுள்ளது.
குறிப்பாக பைடன் நிர்வாகம், அதிபர் டொனால்ட் டிரம்பின் "முஸ்லீம் தடையை" ரத்து செய்யும் என்றும் அது கூறியுள்ளது. ஈரான், சிரியா உள்ளிட்ட பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் "முஸ்லீம் தடை" என்று குறிப்பிடப்படும் சர்ச்சைக்குரிய பயணத் தடையை ஜனாதிபதி டிரம்ப் விதித்திருந்தார். "டிரம்பின்" முஸ்லீம் தடையை பைடென் ரத்து செய்வார் என கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கவிருக்கும் ஜோ பைடன் நிர்வாகம், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஜோ பைடனின் வரவு அமெரிக்க வாழ் இந்தியர்கள் வாழ்வில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.