”இது மிகவும் தவறு” - எலான் மஸ்க்கிற்கு எச்சரிக்கை விடுத்த துணை அதிபர்!
அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம்புவுக்கும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்கிற்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக ட்ரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி, சமூக ஊடகங்கள் மூலம் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ”அதிபர் ட்ரம்ப் குறித்து எலான் மஸ்க் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவுகள் பெரிய தவறு” என துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “அவர் (மஸ்க்) கொஞ்சம் அமைதியாக இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என நான் நினைக்கிறேன். அதிபர் ட்ரம்ப் குறித்து அவர் வெளியிட்ட பதிவுகள் மிகப்பெரிய தவறு. அவர் உணர்ச்சிவசப்படுகிறார். அவர் தனது அமைதியை இழந்துவிட்டார். ஒருகாலத்தில் ட்ரம்புவும் மஸ்க்குவும் நெருங்கிய நண்பர்கள். தற்போது எலான் மஸ்கின் செயல், நாட்டிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அது அவருக்கும் நல்லது அல்ல என்று நான் நினைக்கிறேன். எலான் மஸ்க் மீண்டும் ட்ரம்புடன் இணைவார். எலான் மஸ்க் எதிர்க்கும் மசோதா செலவினங்களைக் குறைப்பது மட்டுமல்ல. இது ஒரு நல்ல மசோதா ஆகும். ஆயிரக்கணக்கான வேலை இழப்புகளுக்கு வழிவகுத்த போதிலும், செலவுகளைக் குறைத்த எலான் மஸ்க் செயல் பாராட்டுக்குரியது. அவர் ஒரு சிறந்த தொழில்முனைவோராக திகழ்ந்தார். ட்ரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எலான் மஸ்க் கூறியது முற்றிலும் பைத்தியக் காரத்தனமானது. அதிபர் ட்ரம்ப் ஒரு நல்ல வேலையைச் செய்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அதிபர் ட்ரம்பைப் பதவிநீக்கம் செய்துவிட்டு, ஜே.டி.வான்ஸை அதிபர் ஆக்க வேண்டும் என எலான் மஸ்க் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.