\
earthquake
earthquakeANI

அடுத்தடுத்து குலுங்கிய நிலம்.. இயற்கை காட்டிய கொடூர கோபம்! தெறித்து ஓடிய மக்கள்!

ஜப்பான், சீனா ஆகிய இரு நாடுகளில் இயற்கை கோர தாண்டவம் ஆடியுள்ளது.
Published on: 
Summary

ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. டோக்கியோ அருகே மையம் அமைந்த நிலையில், மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறினர். சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. சீனாவில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய எல்லைப் பகுதிகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டன. உயிரிழப்புகள் அல்லது பெரிய சேதங்கள் குறித்து தகவல் இல்லை.

செய்தியாளர் - கார்த்திகேயன்

0-ல் இருந்து 4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானால் அது லேசானது என்றும், 4-ல் இருந்து 4.9 வரை இருந்தால் மிதமானது என்றும் கூறப்படுகிறது. ஆனால், 5-ல் இருந்து 5.9 வரை ரிக்டர் அளவுகோலில் பதிவாகும் நிலநடுக்கங்கள் குறிப்பிடத்தக்க பாதிப்பையும், 6-க்கு மேல் பதிவாகும் நிலநடுக்கங்கள் சக்திவாய்ந்தவை என்றும் சொல்லப்படுகிறது. இப்படியான சூழ்நிலையில், ஜப்பான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளில், சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு, பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, ஜப்பானின் டோக்கியோ கடற்கரை பகுதியில், 6.1 ரிக்டர் அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கன்டோ பகுதிக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டோக்கியோ நகருக்கு கிழக்கே உள்ள அசாஹி பகுதிக்கு தென்கிழக்கே சுமார் 169 கிலோமீட்டர் தொலைவில் இதன் மையம் இருந்ததுடன், இது மிகக் குறைந்த ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் 0 முதல் 7 வரையிலான நிலநடுக்க அளவில் இது '3' என்ற அளவில் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக வீடுகளுக்குள் இருப்பவர்கள் அனைவரும் நிலநடுக்க அதிர்வை உணர்ந்திருப்பார்கள். பொதுவாக, இவ்வளவு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால், சுனாமி எச்சரிக்கை விடப்படும். ஆனால், இந்த முறை சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை விடுக்கப்படவில்லை.

earthquake
earthquakeANI

இதேபோல், சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் 5 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. லடாக்கின் லே நகரிலிருந்து சுமார் 167 கி.மீ. தொலைவில் இதன் மையம் அமைந்திருந்தது. இதன் தாக்கம் இந்திய எல்லைப் பகுதிகளிலும் எதிரொலித்ததால், லடாக் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. கட்டடங்கள் குலுங்கியதால் அதிர்ச்சியடைந்த மக்கள், அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இவ்வாறு ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருந்தாலும், இதுவரை உயிரிழப்போ அல்லது பெரிய அளவிலான பொருட்சேதமோ ஏற்பட்டதாக உடனடியாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

earthquake
இடி போல் கேட்ட சத்தம்.. அலறி ஓடிய பொதுமக்கள்! இந்தியாவில் திடீர் நிலநடுக்கம்!