தைவானை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா இராணுவப் பயிற்சி., ஜப்பான் வெளியிட்ட முக்கிய அறிக்கை!
சீன கடல் பகுதி அமைந்துள்ள ஒரு சிறு தீவே, தைவான். ஆனால், தைவானை தனி நாடு அல்ல என்றும், அது சீனாவின் ஒரு பகுதி என்றும் தொடர்ந்து சீனா சொல்லிவருகிறது. இதற்கு தைவான் அரசு முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், தைவான் அதிபர் லாய் சிங் தேவ்-ஐ பிரிவினைவாதி என்றும், தைவான் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் சீனா தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்துவருகிறது. தவிர, தைவானை அச்சுறுத்தும் விதமாக போர்ப் பயிற்சியிலும் சீனா ஈடுபடுவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் தான், தைவானைச் சுற்றியுள்ள பகுதிகளில் சீனா சமீபத்தில் மேற்கொண்டு வரும் இராணுவப் பயிற்சிகள் குறித்து ஜப்பான் அரசு தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜப்பானிய வெளியுறவு அமைச்சகத்தின் பத்திரிகைச் செயலாளர் கிடாமுரா தோஷிஹிரோ இன்று முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தைவான் நீரிணைப் பகுதியில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் சீனாவின் இந்த இராணுவ நடவடிக்கைகள் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஜப்பான் அரசு தனது கவலைகளைச் சீனத் தரப்பிற்கு ஏற்கனவே தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும், தைவான் தொடர்பான சிக்கல்கள் அனைத்தும் பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்பதே ஜப்பானின் நிலையான நிலைப்பாடு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தைவான் நீரிணையில் நிலவும் அமைதியும் ஸ்திரத்தன்மையும் ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கும் மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்ட ஜப்பான் அரசு, இது தொடர்பான நகர்வுகளைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கை ஆசியப் பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாகப் பார்க்கப்படும் நிலையில், ஜப்பானின் இந்த அறிக்கை சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

