80 ஆண்டுகளுக்குப் பிறகு.. ஜப்பானின் முதல் உளவுத் துறை அமைப்பு.. இப்போது ஏன்?
ஜப்பானில், 2025-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும், பிரதமர் சனாயே டகாய்ச்சி (Sanae Takaichi) தலைமையிலான அரசு, பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் அமைப்புகளில் சிதறிக் கிடக்கும் உளவுத் தகவல் சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு பணிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு அமைப்பை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அமைப்புகள் பிரதமரின் நேரடி மேற்பார்வையில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அமைப்பை உருவாக்குவதற்காக, அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் புலனாய்வு அமைப்புகளிடம் ஜப்பான் ஆலோசனை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. உளவு தகவல் சேகரிப்பு, சைபர் பாதுகாப்பு, தொழில்நுட்பம், பணியாளர் பயிற்சி மற்றும் நாடுகளுக்கிடையேயான தகவல் பகிர்வு போன்ற துறைகளில் இந்த ஒத்துழைப்பு அமையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை ஜப்பானின் தேசிய பாதுகாப்பு தொடர்பான உளவுப் பணிகளை காவல்துறை, பாதுகாப்புத் துறை, வெளியுறவு அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தனித்தனியாக மேற்கொண்டு வந்தன. ஆனால் இந்த முறையில், வெளிநாட்டு உளவு நடவடிக்கைகள், சைபர் தாக்குதல்கள் மற்றும் தேர்தல் தலையீடுகளை திறம்பட எதிர்கொள்வதில் சவாலாக இருப்பதாக ஜப்பானின் பாதுகாப்பு நிபுணர்கள் நீண்டகாலமாக சுட்டிக்காட்டி வந்தனர்.
குறிப்பாக, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அதிகரித்து வரும் செல்வாக்கு, ரஷ்யாவின் உளவு நடவடிக்கைகள் மற்றும் வடகொரியாவின் ஏவுகணை, இணையத் தாக்குதல் அச்சுறுத்தல்கள் ஆகியவை ஜப்பானை தனது உளவுத்துறையை மறுசீரமைக்கத் தூண்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், ஜப்பானின் இந்த முயற்சிக்கு அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான மிசுஹோ ஃபுகுஷிமா (Mizuho Fukushima ), இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பான் தனித்துவமான உளவு அமைப்பை உருவாக்காமல், அமைதிக்கான ஜப்பானின் உறுதிப்பாட்டையும் பிரதிபலிப்பலித்து வந்ததாக கூறினார்.
மேலும், தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய உளவு அமைப்பு, தனிநபர்களின் தனியுரிமை உரிமைகளை மீறுவதோடு, அரசின் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் அதிகரிக்க வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்திருக்கிறார்.
எனினும், இந்த புதிய புலனாய்வு அமைப்பு முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பானின் தேசிய பாதுகாப்புக் கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றமாக இது அமையும் என்றும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு அரசியலிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

