ஜப்பான் | அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை! என்ன நடந்தது?
ஜப்பானில் க்யுஷூ பகுதியின் தெற்கு கடற்கரை பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கமானது 7.1 என்ற ரிக்டர் அளவுகோளில் பதிவாகி உள்ளது. முதல் நிலநடுக்கமான இது ஏற்பட்ட அடுத்த ஒரு நிமிடத்திற்குள் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலநடுக்கம் 6.9 என்ற ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளதாக தெரியவந்துள்ளது.
முதல் நிலநடுக்கம்
முதல் நிலநடுக்கமானது ஜப்பானின் தெற்கு முக்கிய தீவான கியூஷூவின் கிழக்கு கடற்கரையில் சுமார் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இது 7.1 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது.
இரண்டாவது நிலநடுக்கம்
ஜப்பானின் வடகிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மியாசாகியில் 26 மீட்டர் ஆழத்தில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சுனாமி எச்சரிக்கை
இதன் இரண்டு நிலநடுக்கங்களின் விளைவாக சுனாமியானது சுமார் 1 மீட்டர் உயரம் வரை தாக்கக்கூடும் என்றும் 3.3 அடி வரை அலைகள் இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஜப்பானும் நிலநடுக்கமும்...
நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வு போன்ற பிரச்னைகளை அடிக்கடி சந்திக்கும் நாடாகவே ஜப்பான் இருந்து வருகிறது. சராசரியாக வருடத்திற்கு ஜப்பானில் சுமார் 1,500 முறை நில அதிர்வுகள் ஏற்படுவதாக தரவுகள் கூறுகின்றன. உலக அளவில் ஏற்படும் நிலநடுக்கங்களில் 18 சதவீதம் ஜப்பானில் மட்டுமே ஏற்படுகின்றன. இதனால், பல உயிர்கள் நிலநடுக்கத்திற்கு பலியாகி வரும் சூழலும் நிலவுகிறது. மேலும் இப்பகுதியில் எரிமலைகளும் அதிகம். எரிமலையின் அடிப்பகுதியில் இருக்கும் லார்வா நகர்வதால், அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.
ஜப்பானில் பேரழிவு என்று பார்க்கையில், கடைசியாக 2011ம் ஆண்டு ரிக்டர் அளவில் 9.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டது. இதில் சுமார் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இப்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தை அடுத்து உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், உயிரிழப்புகள் பெரியளவில் முழுமையாக தடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது. தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு துரிதப்படுத்தி வருகிறது.