ஜப்பான் | சாலையில் ஏற்பட்ட பள்ளம்.. சிக்கிய முதியவர்.. மீட்கும் பணி தீவிரம்!
ஜப்பானின் செய்தமா மாகாணத்திலுள்ள யஷியோ நகர்ப் பகுதியில் கடந்த ஜனவரி 28ஆம் தேதி சாலையின் நடுவே திடீர் பள்ளம் ஒன்று உருவானது. அப்போது, அவ்வழியாகச் சென்ற லாரி ஒன்று அந்தப் பள்ளத்தினுள் கவிழ்ந்தது. இதில், அந்த லாரியை ஓட்டி வந்த 74 வயதுடைய முதியவர் அந்த பள்ளத்தினுள் சிக்கிக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்த அந்நாட்டு மீட்புப் படையினர் முதியவரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த சாலையின் அடியில் அமைக்கப்பட்டிருக்கும் கழிவு நீர் குழாய் பழுதானதினால் இந்த திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அந்த லாரியின் பின்பாகத்தை மீட்புப் படையினர் அந்த பள்ளத்திலிருந்து வெளியே எடுத்தனர். ஆனால், முதியவர் அமர்ந்திருந்த ஓட்டுநர் பகுதி பள்ளத்திலுள்ள மண் மற்றும் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியுள்ளது. இதையடுத்து அவரை மீட்பதில் தொடர்ந்து சிரமம் ஏற்பட்டுள்ளது.
சுமார் 33 அடி அகலத்தில் 5 மீட்டர் ஆழத்திற்கு உண்டான இந்த பள்ளத்தினுள் கழிவு நீர் குழாய் உடைந்து அந்த தண்ணீர் நிரம்பி மற்றொரு புதிய பள்ளம் தோன்றியுள்ளது. அதன் பின்னர் இரண்டு பள்ளங்களும் ஒன்றிணைந்து சுமார் 20 மீட்டர் அகலத்திற்கு மிகப்பெரிய பள்ளமாக உருவாகியுள்ளது. இந்த மிகப்பெரிய பள்ளம் உருவாகியுள்ள சாலையின் அடியில் எரிவாயு குழாய்களும் அமைக்கப்பட்டிருப்பதினால், பாதுகாப்பு கருதி அப்பகுதியிலுள்ள 200 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், அப்பகுதி மக்களுக்கு தண்ணீரை குறைந்த அளவில் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.