”பள்ளிகளில் புர்கா அணியத் தடை” - இத்தாலிய அரசு உத்தரவு!!
பள்ளிகளில் மாணவர்கள் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையிலான புர்கா மற்றும் நிகாப் அணிவதற்கு இத்தாலிய அரசு தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கை பாதுகாப்பு காரணங்களுக்காக கொண்டுவந்துள்ளதாக பிரதமர் மெலோனி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகளும் சில அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனினும், சாதாரண ஹிஜாப் அணிவதற்கு இதில் தடை இல்லை.
மேலும், இத்தாலியின் புதிய கல்விக் கொள்கையின்படி, இத்தாலிய மொழியில் போதிய புலமை இல்லாத மாணவர்களின் எண்ணிக்கைக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஒரு வகுப்பில் இத்தாலிய மொழியை போதுமான அளவு அறியாத மாணவர்கள் 30 சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது என புதிய விதிமுறை கூறுகிறது.
புதிதாக இத்தாலிக்கு வரும் மாணவர்களை இந்த விதிமுறை முக்கியமாக இலக்காகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இத்தாலியிலேயே பிறந்தவர்கள் அல்லது மழலையர் பள்ளியில் படிப்பவர்களுக்கு இந்தக் கட்டுப்பாடு பெரும்பாலும் பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறினால் 1,000 யூரோ வரை அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

