”காஸா பகுதியில் இஸ்ரேல் போர்க் குற்றங்களைச் செய்கிறது” - முன்னாள் பிரதமரே வைத்த குற்றச்சாட்டு!
இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக போர் நடைபெற்ற நிலையில், இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, இரு நாடுகளும் பிணைக்கைதிகளை பரிமாறிக் கொண்டன.
எனினும் இரண்டாம்கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்படாததால், அங்கு தற்போது மீண்டும் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, ஹமாஸ் வசம் உள்ள தங்கள் நாட்டு பிணைக்கைதிகள் 58 பேர் விடுவிக்கப்படும் வரை தாக்குதல்கள் தொடரும் என எச்சரித்துள்ள இஸ்ரேல், காஸாவை தங்கள் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், மறுபுறம் காஸாவிற்குள் உணவுகளை அனுமதிக்காத நிலையும் உள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் பசியுடன் உணவு தேடி அலையும் பரிதாப நிலையும் அங்கு நிலவி வருகிறது.
இந்த நிலையில், காஸா பகுதியில் இஸ்ரேல் போர்க்குற்றங்களைச் செய்து வருவதாக முன்னாள் பிரதமர் எஹுட் ஓல்மெர்ட் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தித்தாளுக்கு அவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில், "காஸாவில் நாம் நடத்துவது ஓர் அழிவுகரமான போர். சாதாரண மக்கள் கண்மூடித்தனமாக, கட்டுப்பாடுகள் இல்லாமல், கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார்கள். இதற்கு ஒரு சில வீரர்களின் நடத்தை காரணமல்ல. இது வேண்டுமென்றே, தெரிந்தே, தீங்கிழைக்கும் நோக்கத்துடன், பொறுப்பு இல்லாமல் எடுக்கப்பட்ட அரசாங்கக் கொள்கையின் விளைவாகும். ஆம், இஸ்ரேல் போர்க்குற்றங்களைச் செய்கிறது.
முதலாவதாக நாம், காஸாவைப் பட்டினி போடுகிறோம். அடுத்து கொள்கையின் ஒரு பகுதியாக, காஸா மக்களுக்கு உணவு மற்றும் மருந்தை நாம் தர மறுக்கிறோம். பொறுப்புக்கூறலைத் தவிர்ப்பதற்காக நெதன்யாகு பதில்களை மறைக்க முயற்சிக்கிறார். காஸாவின் சுமார் 20 லட்சம் மக்களை முற்றிலுமாக அழிப்பதில் எந்த தார்மீக அல்லது இராணுவ நியாயமும் இல்லை” என அதில் தெரிவித்துள்ளார். மறுபுறம், அவருடைய இந்தக் கருத்தை ஆளும்கட்சி அமைச்சர்கள் விமர்சித்துள்ளனர்.
2006 முதல் 2009 வரை இஸ்ரேலின் 12வது பிரதமராக இருந்தவர் ஓல்மெர்ட் என்பது குறிப்பிடத்தக்கது.