பிரான்ஸ், கனடாவின் தலைவர்களை கடுமையாக சாடிய இஸ்ரேல் பிரதமர்! – காரணம் இதுதானா?
E.இந்து
அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸின் எல்லை தாண்டிய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் காசாவின் மீது தனது பயங்கரமான தாக்குதலை தொடங்கியது. இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வரும் தாக்குதலில், 16,500 குழந்தைகள் உட்பட 53,000 க்கும் மேற்பட்டோர் காசாவில் இறந்துள்ளதாக ஹமாஸின் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இஸ்ரேல்-ஹமார் போர் இன்றுவரை ஒரு முடிவை எட்டவில்லை. இந்த போரை நிறுத்துமாறு இரு நாடுகளுக்கும் பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வாரத் தொடக்கத்தில் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளின் தலைவர்கள், இஸ்ரேலின் சமமற்ற எதிர்வினையை கண்டித்து, அங்குள்ள மனிதாபிமான நிலைமை சகிக்க முடியாதது என்று கண்டனம் தெரிவித்தனர். இஸ்ரேல் தனது போக்கை மாற்றவில்லை என்றால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.
இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வீடியோ ஒன்றை நேற்று (மே 23) வெளியிட்டுள்ளார். அதில் பேசிய நெதன்யாகு, “இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் குடியரசுத் தலைவர் இம்மானுவேல் மேக்ரோன் மற்றும் கனடாவின் பிரதமர் மார்க் கார்னி ஆகியோருக்காக பேசுகிறேன்.
படுகொலை செய்பவர்கள், பாலியல் வன்கொடுமை செய்பவர்கள், குழந்தைகளைக் கொலை செய்பவர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் உங்களுக்கு நன்றி தெரிவித்தால் நீங்கள் நீதிக்கு எதிரான பக்கத்தில் இருக்கிறீர்கள் என்பதுதான் பொருள். தற்போது, நீங்கள் அனைவரும் மனிதாபிமானத்திற்கு எதிரான பக்கத்தில் இருக்கிறீர்கள், வரலாற்றின் தவறான பக்கத்தில் இருக்கிறீர்கள்..
மேலும், மேற்கத்திய நாடுகளின் தலைவர்களின் விமர்சனங்களை ஹமாஸ் ஏற்றுக்கொண்டது. ஆனால், அதில் எந்த பயனும் ஏற்படவில்லை. எங்களுக்கு நெருக்கமானவர்கள் என்று நாங்கள் நினைத்த சிலர், இஸ்ரேல் பின்வாங்கினால், ஹமாஸின் படுகொலையாளர்களின் இராணுவம் உயிர்வாழும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த தலைவர்கள் அமைதியை முன்னெடுப்பதாக நாம் நினைக்கலாம். ஆனால், அவர்கள் அப்படி இல்லை. அவர்கள் ஹமாஸை போரில் ஈடுபட ஊக்குவிக்கிறார்கள். மேலும், ஹமாஸ் மீண்டும் யூத அரசை அழிக்க முயற்சிக்கிறது. அனைவரும் நினைவில் கொள்ளுங்கள், இஸ்ரேல் எப்போது ஹமாஸிலிருது விடுபட்ட நாடாக இருக்கப்போவதில்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.