சிரியா மீது போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

கடந்த தாக்குதல்களில் சேதமடைந்திருந்த சாலைகளை சீர்படுத்தும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
israel - cyria
israel - cyriapt web

காசாவில் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அடுத்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், மற்றொரு அண்டை நாடான சிரியா மீதும் இஸ்ரேல் விமானங்கள் குண்டு மழை பொழிந்துள்ளன. இதில் 8 ராணுவ வீரர்கள் இறந்துள்ளதாகவும் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் சிரியா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் சிரிய ராணுவத்தின் 5ஆவது பிரிவின் தலைமையக கட்டடமும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியா பகுதியிலிருந்து நேற்று இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. இஸ்ரேல் நடத்தி வரும் போர் காசாவை தாண்டி பரவும் என்ற அச்சங்கள் உள்ள நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் லெபனான், சிரியாவில் நடக்கும் தாக்குதல்கள் பார்க்கப்படுகின்றன.

இஸ்ரேலின் தாக்குதல் தொடரும் நிலையில் அதற்கு எதிரான அமைப்பின் தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். லெபனானின் பெய்ரூட்டில் நடந்த இச்சந்திப்பில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ருல்லா, ஹமாஸ் துணைத்தலைவர் சலே அல் அரவுரி, பாலஸ்தீன ஜிகாத் தலைவர் ஜியாத் அல் நகாலா ஆகியோர் இப்பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர். இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக போர்க்கப்பல்களை தொடர்ந்து அதிநவீன F 16 விமானங்களையும் அமெரிக்கா தற்போது அனுப்பியுள்ளது.

இந்நிலையில், சிரிய மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேலின் போர் விமானங்கள் சிரியாவின் அலப்போ விமானநிலையம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் வான்படைகள் நடத்திய தாக்குதலில் விமான ஓடுதளம் சேதமடைந்திருப்பதாக சிரியா பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2 வாரங்களில் மட்டும் அலப்போ விமான நிலையம் மீது 4ஆவது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தரைக்கடல் பகுதியாக வந்த இஸ்ரேல் விமானப்படையைச் சேர்ந்த விமானங்கள் இரண்டு ஏவுகணைகளை வீசி இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தாக்குதல்களில் சேதமடைந்திருந்த சாலைகளை சீர்படுத்தும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல் காரணமாக விமான நிலையம் மீண்டும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் போன்ற நாடுகளில் இருந்து சிரியா விமான நிலையங்களுக்கு வெடி பொருட்கள் கொண்டு வரப்படுகிறது என்பதன் அடிப்படையில் இஸ்ரேல் ராணுவத்தினர் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com