தவறான இந்திய வரைபடம் வெளியீடு| மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் ராணுவம்!
இஸ்ரேல் - ஈரான் ஆகிய நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் திடீர் போர்ப் பதற்றம், உலக நாடுகளுக்கு இடையே கவலையை அதிகரித்துள்ளது. ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கக்கூடாது என்ற நிலையிலேயே, அமெரிக்காவின் ஆதரவில் இஸ்ரேல் இத்தகைய போரைத் தொடங்கியுள்ளது. காரணம், ஈரானின் நடான்ஸ் பகுதியில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் 60 சதவிகிதம் உள்ளது. இதை வைத்து ஈரான், விரைவாகவே அணு ஆயுதங்களைத் தயாரிக்க முடியும் என்பதுதான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வாதமாக உள்ளது. அந்த அச்சத்தின் காரணமாகவே இப்போர் தொடங்கப்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கணிக்கின்றனர். எனினும், இஸ்ரேலுக்கு எதிராக ஈரானும் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இது, உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்போரால் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈரான் ஏவுகணைகள் குறித்து விளக்குவது தொடர்பான ஒரு படத்தை எக்ஸ் தளத்தில் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டிருந்தது. அதில் இந்தியாவின் காஷ்மீர வரைபடம் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது, சமூக வலைதளங்களில் சர்ச்சையையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தி இருந்தது. யாரும் நம்பகமான நண்பர்கள் இல்லை என்றும் இதன் காரணமாகத்தான் இந்தியா எப்போதும் நடுநிலை வகிப்பதாகவும் விமர்சனங்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் தவறான எல்லையுடன் கூடிய இந்திய வரைபடத்தை வெளியிட்டுவிட்டதாகவும் அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்திருந்தது. மேலும் இந்த படத்தை வெளியிட்டதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும் அதைப் பார்த்தவுடன் அப்படத்தை நீக்க ஏற்கெனவே அறிவுறுத்திவிட்டதாகவும் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் தெரிவித்துள்ளார்.