”ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார்” - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு!
இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, இரு நாடுகளும் பிணைக்கைதிகளை பரிமாறிக் கொண்டன. எனினும், இன்றுவரை அங்கு போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், ஹமாஸின் காஸா தலைவர் முகமது சின்வார் ராணுவத்தால் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
மே 13 அன்று நடைபெற்ற தாக்குதலின்போது அவர் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தெற்கு காஸாவில் ஐரோப்பிய மருத்துவமனை அருகே நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் சுரங்க அறையில் பதுங்கி இருந்த முகமது சின்வார் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் ஹமாஸ் ஆயுதக்குழுவின் ரபா படைப்பிரிவு தளபதி முகமது ஷபானாவும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் அறிவித்துள்ளார். இது குறித்து ஹமாஸ் தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. கொல்லப்பட்ட முகமது சின்வார் அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதல்களின் மூளையாகச் செயல்பட்ட யஹ்யா சின்வாரின் சகோதரர் ஆவார். கடந்த ஆண்டு, இஸ்ரேலிய ராணுவப் படை தாக்குதலில் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. சகோதரர் இறந்ததைத் தொடர்ந்து ஹமாஸின் ஆயுதக் குழுத் தலைவராக முகமது சின்வார் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.