காஸாவை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் திட்டம்.. எச்சரிக்கும் ஐ.நா.. ஆயுத உதவியை நிறுத்திய ஜெர்மனி!
இஸ்ரேலின் தாக்குதலால் நிலைகுலைந்து போயுள்ள காசாவில் இன்னும் நிம்மதியற்ற சூழலை உருவாக்கும் ஒரு அதிர்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை, காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தலைமையில் நடைபெற்ற 10 மணிநேர நீண்ட ஆலோசனைக்குப்பின் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டது. இதில் முக்கிய ஐந்து இலக்குகள் தீர்மானிக்கப்பட்டன. ஹமாஸின் ஆயுதங்களை அகற்றுவது, அனைத்து பிணை கைதிகளையும் விடுதலை செய்வது, காசாவில் ஆயுதமில்லா மண்டலமாக மாற்றுதல், இஸ்ரேலின் பாதுகாப்பு கட்டுப்பாடுக்குள் கொண்டு வருவது மற்றும் ஹமாஸ் அல்லது பாலஸ்தீன் நிர்வாகம் சாராத புதிய நிர்வாகத்தை அமைத்தல் என ஐந்து முக்கிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்த முடிவு, அமெரிக்கா மற்றும் பல நாடுகளின் கண்டனங்களையும், இஸ்ரேல் ராணுவத் தலைமைத்துவத்தின் சில எதிர்ப்புகளையும் புறக்கணித்து எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இஸ்ரேல்-காசா மோதல் மேலும் தீவிரமடையும் என சர்வதேச சமூகத்தில் அச்சம் நிலவுகிறது. இது குறித்து இஸ்ரேலின் ராணுவ துணைத் தலைவர் ஈயல் ஸமீர், இது பெரிய உயிரிழப்புகளையும், மனிதநேயம் சார்ந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்தார். அவரின் அபிப்பிராயம் பாதுகாப்புக் குழுவில் சிலரால் புறக்கணிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையால் காசா நகரில் உள்ள சுமார் ஒரு மில்லியன் மக்களை இடம்பெயரச் செய்யும் அபாயம் உள்ளதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயினும், இஸ்ரேலின் முழு பாதுகாப்புக் குழுவும் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, இஸ்ரேலின் காசா மீது நீடித்த ராணுவ ஆதிக்கத்தை நிறுவும் முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது. இந்நிலையில், காசாவை முழுமையாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பது பேரழிவுக்கு வழிவகுக்கும் என ஐ.நா. சபை எச்சரித்துள்ளது. இஸ்ரேலின் நடவடிக்கை சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என்றும், மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் ஐ.நா.சபையின் செய்தி தொடர்பாளர் Farhan Haq தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இஸ்ரேலுக்கு வழங்கிவந்த இராணுவ தளவாடங்களின் ஏற்றுமதியை ஜெர்மனி தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. காசாவில் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், தாங்கள் ஏற்றுமதி செய்யும் ஆயுதங்கள் அங்கு பயன்படுத்தப்படலாம் என்ற நிலையில் முடிவை எடுத்துள்ளதாக ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார். காசா நகரை முற்றிலுமாக ஆக்கிரமிக்கப் போவதாக இஸ்ரேல் தெரிவித்ததையடுத்து ஜெர்மன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காசா மக்களின் நிலைமை மிகுந்த கவலை அளிக்கிறது என்றும் காசா மக்களுக்கு நிவாரண உதவிகள் சென்றடைய இஸ்ரேல் உடனடியாக முழு அனுமதியளிக்க வேண்டும்; மேற்கு கரையை இணைக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் இஸ்ரேலுக்கு ஜெர்மன் அதிபர் மெர்ஸ் வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேலின் நட்பு நாடான ஜெர்மனியின் இந்த முடிவு, காசா போரில் ஒரு புதிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.