ட்ரம்பை கொலை செய்ய சதியா... இஸ்ரேல் சொல்வது என்ன?
அணு ஆயுத விவகாரம் தொடர்பாக, ஈரானைக் குறிவைத்து இஸ்ரேல் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதாவது, அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானுமும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. தற்போது இருநாடுகளும் மாறிமாறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், அங்கு நாளுக்கு நாள் போர்ப் பதற்றம் அதிகரித்து வருகிறது. போருக்கு மத்தியில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தன்னுடைய இரண்டாவது மகன் அவ்னெர் நெதன்யாகுவின் திருமணத்தைத் தள்ளி வைத்துள்ளார்.
மறுபுறம், அமெரிக்க அதிபர் ட்ரம்பை கொலை செய்ய ஈரான் திட்டம் போட்டுள்ளதாக அவர் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "ஈரான் அணு ஆயுதங்கள் வைத்து இருப்பதை ட்ரம்ப் விரும்பவில்லை என்பதில் உறுதியாகவும், தெளிவாகவும் உள்ளார். இதனால் அவர் ஈரானின் நம்பர் ஒன் எதிரியாக இருந்து வருகிறார். ட்ரம்ப் தங்களது அணு சக்தி திட்டத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்பதால் அவரை கொல்ல ஈரான் திட்டமிட்டு உள்ளது. அவர்களின் உளவுத்துறை மூலம் ட்ரம்பை கொல்ல விரும்புகிறது. ஈரான் உலகிற்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தலை அகற்ற தேவையான அனைத்தையும் செய்ய இஸ்ரேல் தயாராக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஈரான் நாட்டின் ஆட்சியாளரும், மதத்தலைவருமான கமேனியை கொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டு இருந்ததை ட்ரம்ப் தடுத்து நிறுத்தினார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த நிலையில், போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தற்போது வாய்ப்பில்லை என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடியை கொடுத்த பின்னரே போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் முன்வரும் என்று கத்தார் மற்றும் ஓமன் நாடுகளிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சூழலில் ”ஈரான் மீது அணுகுண்டை வீசினால், இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணு ஆயுதத் தாக்குதலை நடத்தும்” என்று அதன் உயர்மட்டப் படைகளின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) மூத்த அதிகாரியும் ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினருமான ஜெனரல் மொஹ்சென் ரெசாயின், "ஈரான் மீது இஸ்ரேல் அணுகுண்டைப் பயன்படுத்தினால், இஸ்ரேலை அணுகுண்டைப் பயன்படுத்தித் தாக்குவோம் என்று பாகிஸ்தான் எங்களுக்கு உறுதியளித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், இஸ்ரேலுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து பாகிஸ்தானிடமிருந்து எந்தக் கருத்தும் இல்லை. ஆனால் மேற்கத்திய உலகின் ஆதரவைக் கொண்ட இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் ஈரானை ஆதரித்துள்ளது.