60 நாள் போர் நிறுத்தம்.. ட்ரம்ப் மத்தியஸ்தம்.. இஸ்ரேல் ஒப்புதல்.. ஹமாஸ் சொல்வது என்ன?
இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, இரு நாடுகளும் பிணைக்கைதிகளை பரிமாறிக் கொண்டன. எனினும், இன்றுவரை அங்கு போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், ”காஸாவில் 60 நாள் போர் நிறுத்தத்தை இறுதி செய்வதற்கு தேவையான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. அதே நேரத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து தரப்பினருடனும் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம். மத்திய கிழக்கின் நன்மைக்காக, ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். இல்லையெனில், இது மோசமாகிவிடும்” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால், இதை ஏற்றுக் கொள்ளாத ஹமாஸ், முழுவதும் போர் நிறுத்தத்தை விரும்புவதாகத் தெரிவித்துள்ளது. மேலும், பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்திற்கான முக்கிய நிபந்தனைகள் குறித்து இஸ்ரேலும் ஹமாஸும் முரண்படுகின்றன.
இதற்கிடையே இஸ்ரேலிய வெளியுறவுத் துறைஅமைச்சர் கிடியோன் சார், "முடிந்தவரை விரைவில் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக ஹமாஸுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க நாடு ஆர்வமாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹமாஸை ஒழிப்பதாக சபதம் செய்துள்ளார். "நாங்கள் எங்கள் பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவிப்போம். மேலும் ஹமாஸை ஒழிப்போம். அது இனி இருக்காது" என எச்சரித்துள்ளார்.
மறுபுறம், 60 நாள்கள் போர் நிறுத்தம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டால், இந்தக் காலகட்டத்தில், இஸ்ரேல் பல பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக, காஸாவில் உயிருடன் இருக்கும் இஸ்ரேலிய கைதிகளில் பாதிப் பேரை ஹமாஸ் விடுவிக்கும். 2023 அக்டோபரில் பாலஸ்தீன போராளிகளால் பிடிக்கப்பட்ட 251 பணயக்கைதிகளில் 49 பேர் தற்போது காஸாவில் உள்ளனர். இஸ்ரேலிய இராணுவத்தின் கூற்றுப்படி, இந்த பணயக்கைதிகளில் 27 பேர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.