\
Israel Election 2026: Netanyahu in Trouble? Tight Race for Power!
Benjamin NetanyahuReuters

இஸ்ரேல் தேர்தல் 2026 : நெதன்யாகுவுக்கு அதிர்ச்சி? ஆட்சியைப் பிடிக்க கடும் போட்டி!

போரின் நிர்வாகம் தேர்தல் முடிவில் முக்கிய பாதிப்பு ஏற்படுத்துமா?
Published on: 

செய்தியாளர் - M.மீரா

இஸ்ரேலில் வரும் அக்டோபர் 27, 2026 அன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான லிகுட் கட்சி கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைப்பது சவாலாக இருக்கலாம் என சமீபத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. இதில் குறைந்தது 61 இடங்களைப் பெற்றால்தான் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். ஆனால், தற்போதைய கருத்துக்கணிப்பு முடிவுகள் எந்த ஒரு பெரிய கூட்டணிக்கும் அந்த அளவுக்கு ஆதரவு கிடைக்காமல் போகலாம் என்பதைக் காட்டுகின்றன.

Israel Parliament
Israel Parliament reuters

இஸ்ரேலில் இருக்கும் சேனல் 12 மற்றும் சேனல் 13 நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்புகளின்படி, நெதன்யாகுவின் லிகுட் கட்சி இடம்பெற்றுள்ள கூட்டணி 49 முதல் 51 இடங்கள் வரை பெறலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசன்காட் (Gadi Eisenkot) தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி 52 முதல் 54 இடங்கள் வரை பெற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

இதனால், தேர்தலில் இரு தரப்புக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆனால், இரு கூட்டணிகளுமே தனியாக 61 இடங்களைப் பெறும் நிலையில் இல்லை என்பதால், சிறிய கட்சிகளின் ஆதரவு ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கலாம் என்று கூறப்படுகிறது

இந்தத் தேர்தலில் 2023 அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதல் மற்றும் அதற்குப் பிறகு நடந்த போர் முக்கியமான விவகாரமாக மாறியுள்ளது.

இஸ்ரேல் ஜனநாயக மையம் நடத்திய ஆய்வின்படி, பல வாக்காளர்கள் தங்களது வாக்கை செலுத்தும்போது போர் எப்படி கையாளப்பட்டது, நாட்டின் பாதுகாப்பு நிலைமை எப்படி உள்ளது என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க உள்ளனர். இதனால், போரின் நிர்வாகம் தொடர்பான நெதன்யாகு அரசின் செயல்பாடுகள் தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

Netanyahu in Israel Parliament
Netanyahu in Israel Parliament Reuters

தேர்தல் முடிவில் எந்த கூட்டணிக்கும் 61 இடங்கள் கிடைக்கவில்லை என்றால், அடுத்த கட்டத்தில் சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும்.

குறிப்பாக அரபு சமூகத்தைச் சேர்ந்த கட்சிகளின் ஆதரவுடன் சிறுபான்மை அரசு அமைப்பது அல்லது பல்வேறு கட்சிகளை இணைத்து புதிய கூட்டணி உருவாக்குவது போன்ற வாய்ப்புகள் குறித்து அரசியல் ரீதியாக ஆலோசிக்கப்படலாம்.

இதனால், அக்டோபர் 27 தேர்தல் முடிவுகள் மட்டுமின்றி, அதற்குப் பிறகு நடைபெறும் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் இஸ்ரேலில் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் முக்கிய கட்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Israel Election 2026: Netanyahu in Trouble? Tight Race for Power!
ஈரான் பதற்றம்.. பெரும் பின்னடைவில் அமெரிக்கா.. வெளியேறிய போர்க்கப்பல்கள்!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com