ஏமன் அதிபர் மாளிகையைக் குறிவைத்த இஸ்ரேல்.. மீண்டும் போர் பதற்றம்!
காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி அமைப்பினர் செயல்பட்டு வரும் நிலையில், அவர்களின் அதிபர் மாளிகையை இஸ்ரேல் குறிவைத்துத் தாக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வரும் நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இடையில் பேச்சுவார்த்தை ஏற்பட்டு சில நாட்கள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தாலும், மறுபடியும் அங்கு இன்றுவரை போர் தொடர்கிறது. இதுவரை அங்கு 61,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். இதற்கிடையே, ஹமாஸ் வசம் உள்ள தங்கள் நாட்டு பிணைக்கைதிகள் 58 பேர் விடுவிக்கப்படும் வரை தாக்குதல்கள் தொடரும் என எச்சரித்துள்ள இஸ்ரேல், காஸாவை தங்கள் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளது.
காஸாவின் 80 சதவீத பகுதி தற்போது இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், மீதமுள்ள 20 சதவீத பகுதிகளிலும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி, தங்கள் வசப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இந்தப் போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஏமன் தலைநகர் சனா மீது நேற்று இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதில், ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும், 86 பேர் காயமடைந்ததாகவும், 20க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் ஹவுதிகளால் நடத்தப்படும் சபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய சனாவில் உள்ள ஒரு கட்டடத்தைக் குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹவுதி பாதுகாப்பு வட்டாரம் AFP இடம் தெரிவித்துள்ளது. சனாவின் தெற்கில் உள்ள ஓர் எண்ணெய் நிறுவன வசதி மற்றும் ஒரு மின்நிலையத்தையும் அவர்கள் தாக்கியதாக குழுவின் அல்-மசிரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
மேலும், "ஏமனில் உள்ள ஹவுதி அதிபர் மாளிகையை இஸ்ரேல் அழித்துவிட்டது" என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் காட்ஸ் தெரிவித்திருந்தார். இருப்பினும் ஏமனில் இருந்து அத்தகைய தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இத்தாக்குதல் குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “நம்மை யார் தாக்கினாலும், நாங்கள் அவர்களைத் தாக்குவோம். யார் நம்மைத் தாக்கத் திட்டமிட்டாலும், நாங்கள் அவர்களைத் தாக்குவோம். முழு பிராந்தியமும் இஸ்ரேலின் வலிமையையும் உறுதியையும் கற்றுக்கொள்கிறது. ஹவுதி பயங்கரவாத ஆட்சி அது கொடுக்க வேண்டிய கடினமான வழியைக் கற்றுக்கொள்கிறது மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான அதன் ஆக்கிரமிப்புக்கு மிகப் பெரிய விலையைக் கொடுக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி ஏமன் அரசுபாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. இதையடுத்தே, இஸ்ரேல் இத்தகைய தாக்குலை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளது. இதற்கிடையே இருநாடுகளிடையே மீண்டும் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.