ஏமன் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்.. உயிர்பிழைத்த உலக சுகாதார அமைப்பு தலைவர்!
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காஸா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர். இவர்களை மீட்கும் முயற்சியில், இஸ்ரேல் போர் தொடுத்தது.
ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா உள்ளது. லெபனானில் இயங்கிவரும் இந்த ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு ஈரான் ஆதரவாக உள்ளது. இதனால் போர், கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள், தளபதிகள் கொல்லப்பட்டனர்.
இவர்களைத் தவிர இந்தப் போரில் 45 ஆயிரத்திற்கும் (45,338) மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்தனர். மேலும், போர் காரணமாக சுமார் 12 லட்சம் பேர், தங்கள் இடங்களைவிட்டு வெளியேறியிருந்தனர்.
இந்தச் சூழலில், அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தல் மாற்றம் காரணமாக, விரைவில் இங்கு போர் நிறுத்தம் ஏற்படலாம் எனக் கூறப்பட்டது. இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய இருநாடுகள் எடுத்த முயற்சியின் பலனாக இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே, கடந்த நவம்பர் 27ஆம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. இஸ்ரேல் மற்றும் லெபனான் ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டிய நிலையிலும், இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வரவில்லை.
இந்த நிலையில், சமீபத்தில் ஹவுதி படையினரின் தாக்குதலுக்கு பதிலடியாக ஏமன் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. தலைநகர் சனாவை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. விமான நிலையம் அருகே குண்டுகள் விழுந்ததில் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன.
தாக்குதலில் இருந்து தப்பிக்க விமான நிலையத்தில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இஸ்ரேல் நடத்திய தாக்குதலின்போது உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோல் சனா விமான நிலையத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தாக்குதலில் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்த தகவல் வெளியாகாத நிலையில் பலர்உயிரிழந்திருக்கக் கூடுமென அஞ்சப்படுகிறது. ஏமன் மீதான தாக்குதல் தொடர்பாக பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ, தங்களது பணி முடிவடையும் வரை தாக்குதல் தொடரும் என எச்சரித்துள்ளார்.
ஹவுதி மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரம் அடைந்துள்ள மோதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, ஏமனின் சனா விமான நிலையம் உள்ளிட்டப் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் மிகுந்த கவலை அளிப்பதாக தெரிவித்துள்ள ஐ.நா பொதுச்செயலாளர் ஆண்டனி குட்டரஸ், இருதரப்பும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியுள்ளார். சர்வதேச விதிகளை மதித்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என்றும் ஐ.நா பொதுச்செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.