காபூல் சீன உணவகத்தில் தற்கொலைப் படை தாக்குதல்.. 7 பேர் பலி.. ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த சீன உணவகம் ஒன்றில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் ஒரு சீன நாட்டவர் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த சீன உணவகம் ஒன்றில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் ஒரு சீன நாட்டவர் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்-கே பயங்கரவாத அமைப்பு அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளது. காபூலின் மையப்பகுதியில் உள்ள தூதரகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் நிறைந்த 'ஷார்-இ-நாவ்' மாவட்டத்தில் இந்த உணவகம் அமைந்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவர், வெடிகுண்டு நிரப்பப்பட்ட ஆடையை அணிந்து உணவகத்திற்குள் புகுந்துள்ளார். சுமார் 30 நிமிடங்கள் அங்கேயே தங்கியிருந்த அவர், சீனர்கள் அதிகளவில் கூடியிருந்த தருணத்தில் குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் சீனாவைச் சேர்ந்த 'அயூப்' என்ற நபர் மற்றும் 6 ஆப்கானியர்கள் என மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 13-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தாக்குதலுக்குப் பிறகு 'அமக்' செய்தி நிறுவனம் மூலம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆப்கானிஸ்தானில் உள்ள சீன நாட்டவர்களைத் தங்களது தாக்குதல் பட்டியலில் சேர்த்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. சீன அரசு உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கும் கொடுமைகளுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐஎஸ்ஐஎஸ் கூறியுள்ளது. தலிபான் அரசுக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் ராஜதந்திர உறவுகளைக் குலைப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும்.

