இஸ்ரேல் மீது 83-வது கட்ட தாக்குதல்.. ”இந்திய மக்களுக்கு நன்றி”.. ஏவுகணைகளில் எழுதியுள்ள வாசகம்.!
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் 4-வது வாரத்தை எட்டியிருக்கும் நிலையில், போரின் முதல் நாளிலேயே ஈரானை 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்த அயதுல்லா காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். இதற்கு பழிவாங்கப்போவதாக தெரிவித்த ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள ராணுவத் தளவாடங்கள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. அதேசமயம், அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீதான் தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றன. இதனால், உலகின் 20 சதவீதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியை ஈரான் முடக்கிவைத்திருப்பதன் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்திருக்கிறது. இதன்மூலம், ஒவ்வொரு நாடும் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகிறது.
இந்த சூழலில்தான், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான சுமுக பேச்சுவார்த்தைக் காரணமாக தற்கலிகமாக போர் நிறுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டரம்ப் அறிவித்திருக்கிறார். ஆனாலும், ஈரான் பேச்சுவார்த்தை நடந்ததை தொடர்ந்து மறுத்து வருகிறது. ஈரான் தொடர்ந்து தாக்குதலை நடத்திவரும் நிலையில், அமெரிக்காவும் மேற்காசியவிற்கு கூடுதலாக 10 ஆயிரம் பேரை அனுப்ப முடிவு செய்துள்ளது. இதற்கிடையில், எதிரி நாட்டுக் கப்பல்களைத் தவிர மற்றக் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையைக் கடக்கலாம் என அனுமதியளித்திருக்கிறது. இதன்காரணமாக, இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் எரிபொருள் கப்பல்கள் தங்கள் நாடுகளுக்கு செல்லத் தொடங்கியிருக்கின்றன. இதன்மூலம், எரிபொருள் தட்டுப்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் தான், தன் நாட்டு ஏவுகணைகளில் ”இந்திய மக்களுக்கு நன்றி” என்ற வாசகங்களை எழுதியுள்ளது போன்ற புகைப்படங்களை ஈரான் தூதரம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும், இந்தப் பதிவில், போர் காலக்கட்டத்தில் தங்களுடன் துணை நிற்கும் ஜெர்மனி, பாகிஸ்தான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக, 83-வது கட்டத் தாக்குதல்கள் இன்று நடைபெற்றதாக இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இதில், இஸ்ரேலில் உள்ள இடங்களையும் அமெரிக்கப் படைகள் பயன்படுத்தும் தளங்கள் உட்பட வளைகுடாப் பகுதி முழுவதும் உள்ள இராணுவத் தளவாடங்களையும் குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டன எனத் தெரிவித்திருக்கிறது.

