வரலாற்றில் முதல்முறை | இனி அமெரிக்க கரன்சியில் ட்ரம்ப் கையெழுத்து.. புதிய நடைமுறை அமல்!
அமெரிக்காவில் இதுவரை புழக்கத்தில் இருக்கும் கரன்சி (டாலர்) நோட்டுகளில் அந்நாட்டின் கருவூலச் செயலர் மற்றும் கருவூல பொருளாளர் ஆகியோரின் கையெழுத்து மட்டுமே இடம்பெறுவது மரபாக இருந்து வந்தது. இந்த நிலையில், அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக நாட்டின் கரன்சி நோட்டுகளில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திடும் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.
அமெரிக்க அதிபராக கடந்த ஆண்டு ஜனவரியில் மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். குடியுரிமை, விசா, வரி, போர் எனப் பலவித செயல்களில் தீவிரம் காட்டி வருகிறார். தவிர, நாட்டிலும் பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இந்த நிலையில், அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக நாட்டின் கரன்சி நோட்டுகளில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திடும் புதிய நடைமுறையைக் கொண்டு வந்துள்ளார். அமெரிக்காவில் இதுவரை புழக்கத்தில் இருக்கும் கரன்சி (டாலர்) நோட்டுகளில் அந்நாட்டின் கருவூலச் செயலர் மற்றும் கருவூல பொருளாளர் ஆகியோரின் கையெழுத்து மட்டுமே இடம்பெறுவது மரபாக இருந்து வந்தது.
இந்த நிலையில், அமெரிக்காவின் 250வது ஆண்டு நாளைக் கொண்டாடும் வகையில், அதிபரின் உருவம் பொறித்த 24 காரட் தங்க நாணயத்தை வெளியிடுவதற்கான இறுதி வடிவமைப்புக்கு ‘பெடரல்’ கலை ஆணையம் இந்த மாத தொடக்கத்தில் ஒப்புதல் அளித்திருந்தது. இந்தச் சூழலில், அமெரிக்க கருவூலத் துறை இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இனிமேல் அச்சிடப்படவுள்ள அனைத்து புதிய அமெரிக்க டாலர் நோட்டுகளிலும் அதிபர் ட்ரம்ப் கையெழுத்து இடம்பெறவுள்ளது. பதவியில் இருக்கும் ஒரு அதிபரின் கையெழுத்து கரன்சி நோட்டுகளில் இடம்பெறுவது அமெரிக்க வரலாற்றிலேயே இதுவே முதல்முறையாகும். இந்த புதிய நோட்டுகளில் அதிபரின் கையெழுத்துடன் சேர்த்து, கருவூலச் செயலர் ஸ்காட் பெசென்ட் கையெழுத்தும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அமெரிக்க கரன்சி நோட்டுகளில் ட்ரம்ப் கையெழுத்திடும் புதிய நடைமுறைக்கு எதிர்ப்பும் வலுத்து வருகிறது.
இதுகுறித்து கருவூலச் செயலர் ஸ்காட் பெசென்ட்,‘நமது நாட்டின் மகத்தான வரலாற்றுச் சாதனைகளை அங்கீகரிப்பதற்கு, அமெரிக்க டாலர் நோட்டுகளில் அதிபர் ட்ரம்ப் பெயர் இடம்பெறுவதை விட வலிமையான வழி வேறு எதுவும் இருக்க முடியாது’ என்று தெரிவித்தார்.
அமெரிக்க கருவூலப் பொருளாளர் பிராண்டன் பீச், ‘அமெரிக்க கரன்சியில் அதிபர் டிரம்ப் கையெழுத்தை அச்சிடுவது என்பது மிகவும் பொருத்தமானது மட்டுமல்ல, அது அவருக்குக் கிடைத்துள்ள தகுதியான அங்கீகாரமும் ஆகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக, நாட்டின் கலாசார அடையாளங்களாகத் திகழும் அமெரிக்க அமைதி நிறுவனம் மற்றும் கென்னடி கலை மையம் ஆகியவற்றின் பெயர்களை மாற்றிய அதிபர் டொனால்டு ட்ரம்ப், புதிய வகை போர்க்கப்பல்களுக்கும் தனது பெயரைச் சூட்டிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

