மாயமான 400 கிலோ யுரேனியம்.. ஈரான் செய்தது என்ன? அமெரிக்க உளவுத் துறைக்கு கிடைத்த புதிய தகவல்!
அணு ஆயுத விவகாரம் தொடர்பாக, ஈரானைக் குறிவைத்து இஸ்ரேல் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தியது. அதாவது, அணு ஆயுதத்தைத் தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி ஈரான் மீது 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் கடந்த ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக ஈரானுமும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இருநாடுகளும் மாறிமாறி தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் குதித்தது. தவிர, ’ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ என்ற பெயரில் அமெரிக்கா, ஈரானின் அணுசக்தி மையங்களான ஃபோர்டோ, நடான்ஸ், மற்றும் இஸ்பஹான் ஆகியவற்றைத் தாக்கியது.
இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்த ஈரான், இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இதில், குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, தற்போது இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த நிலையில், இஸ்ரேலும், ஈரானும் ஒப்புக் கொண்டுள்ளன.
இந்த நிலையில், ஈரான் சேமித்து வைத்து இருந்த 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் எங்கே போனது என தெரியவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, இஸ்ரேலுக்கு ஆதரவாக களத்தில் குதித்த அமெரிக்கா, ’ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ என்ற பெயரில் ஈரானின் அணுசக்தி மையங்களான ஃபோர்டோ, நடான்ஸ், மற்றும் இஸ்பஹான் ஆகியவற்றைத் தாக்கியது. இதனால் ஈரானின் அணுசக்தி மையங்கள் அழிவுக்குள்ளாகின என அமெரிக்கா தெரிவித்திருந்தது. இதுகுறித்து அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், “ஈரான் சேமித்து வைத்து இருந்த 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் எங்கே போனது என தெரியவில்லை. அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் சேதம் அடைந்து இருக்கும். இதனால் ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
அதேநேரத்தில், அமெரிக்கா இங்கு தாக்குதல் நடத்தும் எனத் தெரிந்தே அங்கிருந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் வேறு பகுதிக்கு மாற்றியிருப்பதாகத் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் போர்டோவ் அணுசக்தி நிலையங்கள் முன்பு 16 டிரக்குகள் வரிசையில் நின்றது செயற்கைகோள் எடுத்த புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்கு பிறகு அந்த இடத்தில் அந்த டிரக்குகள் காணப்படவில்லை. அதில் என்ன கொண்டு செல்லப்பட்டது என தெரியவில்லை என அமெரிக்க நாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளில், “ஈரானில் இன்னும் அணு ஆயுதங்களைத் தயாரிக்கப் பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் இருப்பு உள்ளது. அமெரிக்கா வார இறுதியில் மூன்று ஈரானிய மையங்கள் மீது குண்டுவீச்சு நடத்திய பிறகு, 400 கிலோகிராம் பொருள் கையிருப்பு இருக்கும் இடம் தெரியவில்லை. அங்கு, காணாமல் போன யுரேனியம் 60 சதவீதம் செறிவூட்டப்பட்டுள்ளது. 90 டிகிரி செல்சியஸில், இதை அணு ஆயுதங்களில் பயன்படுத்தலாம். அமெரிக்கா அவற்றை அழிப்பதற்கு முன்பாகவே, ஈரான் யுரேனியத்தையும், செறிவூட்டலைத் தொடர சில உபகரணங்களையும் வேறொரு ரகசிய இடத்திற்கு நகர்த்தியிருக்கலாம் என்று செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.
இதன் காரணமாகவே அங்கு பெரிய அளவில் சேதங்களும் இழப்புகள் ஏற்படவில்லை. இதற்கிடையே அவைகள், ஒரு காரின் பூட்டில் பொருந்தும் அளவுக்கு ஒவ்வொன்றும் சிறியதாக்கப்பட்டு சிறப்புப் பெட்டிகள் வாயிலாக லாரிகளில் ஏற்றப்பட்டு, இஸ்பஹானுக்கு அருகிலுள்ள மற்றொரு நிலத்தடி தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம்” என அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.