ஈரான் தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பு.. ஒருவர் மாயம்!
ஈரான்–அமெரிக்கா பதற்றம் தீவிரமடைந்த நிலையில், ஜோர்டானில் ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொண்டு தற்காப்பு நடவடிக்கையில் இருந்த அமெரிக்க படையினர் மீது நடந்த தாக்குதலில் 2 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்; 1 வீரர் காணாமல் போயுள்ளார்.
செய்தியாளர் - M. மீரா
ஈரான் அமெரிக்கா இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் தொடர் தாக்குதல்களை எதிர்கொண்டு தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, ஜோர்டானில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் , ஒரு ராணௌவ வீரர் காணாமல் போயுள்ளதாகவும் அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன் மூலம், போர் தொடங்கியதிலிருந்து கொல்லப்பட்ட அமெரிக்க ராணுவத்தினரின் மொத்த எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது; மேலும் 430-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்
CENTCOM வெளியிட்ட அறிக்கையின்படி,உயிரிழந்த ராணுவ வீரர்களின் உறவினர்களுக்கு அதிகாரப்பூர்வமாகத் தகவல் தெரிவிக்கப்பட்ட 24 மணிநேரம் வரை, அவர்களின் அடையாளம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை வெளியிடப்போவதில்லை என்று சென்ட்காம் (CENTCOM) தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்தால் அமெரிக்காவுக்கு மறக்க முடியாத பாடங்களை புகட்டத் தயாராக இருப்பதாக ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனி புதிய எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அமெரிக்க ராணுவத்தின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

