ஈரானுக்கு வெற்றி.. அமெரிக்காவுக்கு பேரிடி.. அதிர்ச்சியில் உலக நாடுகள்!
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாப் அல்-மந்தேப் ஜலசந்தியை கைப்பற்றியதால், சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் எண்ணெய் விநியோகத்தில் பெரும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. இது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
செய்தியாளர் - M.மீரா
ஏமனில் ஈரான் ஆதரவுப் பெற்ற ஹவுதிகளுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹவுதி படைகள் ஏடன் நகரத்தைச் சுற்றி வளைத்து, அரசுப் படைகளுக்கு எதிராக தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
இந்த தீவிரமான தாக்குதல்களுக்கு இடையே உலக வர்த்தகத்தின் மிக முக்கிய கடல்வழிப் பாதையான பாப் அல்-மந்தேப் (Bab al-Mandeb) ஜலசந்திப் பகுதியை ஏமனின் ஹவுதி (Houthi) கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தங்களது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் முக்கிய கடல்வழிப் பாதைதான் இந்த பாப் அல் மண்டெப் ஜலசந்தி. ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் வழித்தடத்தின் நுழைவாயிலாக இந்த ஜலசந்தி திகழ்கிறது.
ஏமனில் சவுதி அரேபியா ஆதரவுடன் செயல்பட்டு வந்த அதிகாரப்பூர்வ அரசுப் படைகள், பாப் அல்-மந்தேப் மற்றும் துபாப் விமான நிலையப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாப் அல் மந்தேப் ஜலசந்தியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் ஹவுதி படைகள் .
ஹவுதி படையினர் ஏமனின் இடைக்காலத் தலைநகரான ஏடன் (Aden) மற்றும் தாயிஸ் நகரங்களை நோக்கித் தீவிரமாக முன்னேறி வருகின்றனர். இந்த நகரங்களை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் ஏமன் அரசுப் படைகள் பாப் அல்-மந்தேப் பகுதியிலிருந்து பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைப் பயன்படுத்திக் கொண்ட ஹவுதிகள், செங்கடலின் நுழைவாயிலில் அமைந்துள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பெரிம் தீவு (Perim Island) மற்றும் மொகா (Mokha) துறைமுக நகரைக் கைப்பற்றியுள்ளனர்.
ஏற்கனவே கடந்த சில மாதங்களாக செங்கடலில் சர்வதேசக் கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், தற்போது ஒட்டுமொத்தப் பகுதியும் அவர்களின் வசம் சென்றுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இது சர்வதேசக் கப்பல் போக்குவரத்து, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் கடல்சார் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறும் எனவும் அஞ்சப்படுகிறது.
ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் நடவடிக்கைகளால் உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளாதார பேரழிவினால் ஐரோப்பா நாடுகளில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், இரண்டு முக்கிய கடல்வழிப் பாதைகளிலும் பதற்றம் அதிகரித்தால், சர்வதேச வர்த்தகம் மற்றும் வளைகுடா நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதி மேலும் கடுமையாகப் பாதிக்கப்படலாம்.

