ஈரானின் ’மாரடைப்பு ஆயுதம்’.. அச்சத்தில் எதிரி நாடுகள்.. வெளியேறும் US போர்க் கப்பல்!
ஈரான், மாரடைப்பு ஆயுதம் தொடர்பாக எச்சரிக்கை விடுத்திருப்பதைத் தொடர்ந்து, அந்த ஆயுதம் தொடர்பான யூகங்களை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். தற்போதைய தகவலின்படி, அது, ’ஹூட் ராக்கெட் டார்பிடோ’வாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் - போர்ப் பதற்றம்
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ஈடுபட்டு வரும் நிலையில், அதை ஈரான் புறக்கணித்திருக்கிறது. இதற்கிடையில், உலகின் 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் கப்பல்களைக் குறிவைத்தும், கைப்பற்றியும் அச்சுறுத்தி வருகின்றன. இதனால் உலகளாவிய அளவில் எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈரான் அமெரிக்காவிற்கு 3 நிபந்தனைகளை முன்வைத்தது. ஆனால், அதை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், மீண்டும் போர் நிகழ வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. ஹூட் என்பது என்ன? அதன் செயல்பாடுகள் என்ன என்பது குறித்து இங்கு அறிவோம்.
ஈரானின் மாரடைப்பு ஆயுதம்
இதற்கிடையே, அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகளுக்கு எதிரான போரில் ஒரு புதிய ஆயுதத்தைப் பயன்படுத்தப் போவதாக ஈரான் எச்சரித்துள்ளது. இதுகுறித்து, ஈரானின் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஷாராம் இரானி, “அந்த ஆயுதத்தைக் கண்டு எதிரிப் படைகள் மிகுந்த அச்சம் கொள்ளக்கூடும் என்றும், அது அவர்களுக்கு மாரடைப்பை ஏற்படுத்தக்கூடும்” என்றும் தெரிவித்துள்ளார்.
ஈரான், இப்படி எச்சரிக்கை விடுத்திருப்பதைத் தொடர்ந்து, அந்த ஆயுதம் தொடர்பான யூகங்களை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். தற்போதைய தகவலின்படி, அது, ’ஹூட் ராக்கெட் டார்பிடோ’வாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது,.
ஹூட் என்பது என்ன? அதன் செயல்பாடுகள் என்ன?
ஹூட் ராக்கெட் டார்பிடோ என்பது, உலகின் அதிவேகமான நீருக்கடியில் தாக்கும் ஆயுதங்களில் ஒன்று என ஈரான் உரிமை கோரியுள்ளது. பாரசீக மொழியில் 'ஹூட்' என்றால் திமிங்கலம் என்று பொருள்.உண்மையில், 'சூப்பர்-கேவிட்டேட்டிங் டார்பிடோ' எனப்படும் ஆயுதத்தைக் கொண்டுள்ள ரஷ்யாவிற்குப் பிறகு, ஈரான் இரண்டாவது நாடாகும். ஈரானின் 'ஹூட்' டார்பிடோ நீருக்கடியில் 360 கிமீக்கும் அதிகமான வேகத்தை எட்டும் என்று அந்நாடு கூறுகிறது. அதாவது, 200 கிலோகிராமுக்கும் அதிகமான எடையுள்ள உயர்-வெடிமருந்து போர்க்குண்டைச் சுமந்து செல்லும் அதன் திறன்தான், ஹூட்டை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்துகிறது. சாதாரண ஆயுதத்தைப் போல நீரைக் கிழித்துச் செல்வதற்குப் பதிலாக, தன்னைச் சுற்றி ஒரு வாயு குமிழியை உருவாக்கி, அடிப்படையில் கடலை ஒரு அதிவேக ஓடுபாதையாக மாற்றுகிறது. இது சாராம்சத்தில், ஏவிவிட்டு மறந்துவிடும் ஒரு ஏவுகணை ஆகும்.
எனினும், ஈரானின் ஹூட் வெறும் 15 கி.மீ. வரம்பை மட்டுமே கொண்டுள்ளன. இதனால், எதிரி நாட்டுக் கப்பலை வீழ்த்த ஈரான் கப்பல் நெருங்கிச் செல்ல வேண்டும். ஆனால், இதைக் கொண்டுசெல்வது என்பது ஈரானுக்குச் சாத்தியமற்றது. காரணம், அங்கே அமெரிக்கக் கப்பல்கள் ஈரானின் நடவடிக்கையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.
ஈரானின் ரகசியம் வெளியில் தெரிவதில்லை
அதேநேரத்தில், போர்க்களத்தில் ஆச்சரியமூட்டும் தாக்குதல்களை நடத்துவதில் ஈரான் பெயர் பெற்றது என்பதால், அதன் ரகசியம் வெளியில் தெரிவதில்லை. இந்த ஆயுதத்தை அது, தன்னுடைய ஹார்முஸ் நீரிணைப் பகுதியிலிருந்து பதுங்கித் தாக்கலாம் என்பதே பலருடைய யூகமாக இருக்கிறது. இதன் காரணமாகவே, அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்கள் ஹார்முஸ் பகுதியைத் தவிர்த்து, சற்று தொலைவில் இருந்தே செயல்பட்டு வருகின்றன. ஒருவேளை, ஈரானின் 'ஹூட்' யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் உள்ளிட்ட கப்பல்களைத் தாக்க முடியாது என்று கூறப்படுகிறது.
வெளியேறும் அமெரிக்க கப்பல்!
காரணம், அதன் கட்டமைப்புகள். எனினும், ஈரான் அதைத் தாக்கும்பட்சத்தில், அது பெரிய விளைவுகளைச் சந்திக்கும் எனக் கூறப்படுகிறது. இன்னொரு புறம், ஈரான் 'ஹூட்'டைத்தான் செயல்படுத்தப்போகிறதா என்பது குறித்த விவரங்களும் தெரியவில்லை. அதேநேரத்தில், ஈரானின் இந்த ரகசிய ஆயுதம் குறித்து அமெரிக்காவே அஞ்சுகிறது எனக் கூறப்படுகிறது. முன்னதாக, உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டு, மீண்டும் அமெரிக்கா செல்கிறது. மத்திய தரைக்கடலில் ஈரான் போர் தொடங்கிய ஆரம்ப நாட்களில் பங்கேற்ற இந்தக் கப்பல், பின்னர் சூயஸ் கால்வாய் வழியாகச் சென்று மார்ச் மாத தொடக்கத்தில் செங்கடலுக்குள் நுழைந்தது. இருப்பினும், இது எதிர்பாரா தீ விபத்தைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

