ஈரானில் வேற்றுக்கிரகவாசிகள்? சுற்றுப்போட்ட ‘பிளாக் மான்டா'? சத்தமின்றி வேடிக்கை பார்க்கும் US!
ஹாலிவுட் படங்களில் தோன்றுவதைப் போன்று ஈரானின் தலைநகருக்குள் மர்மப் பொருள் ஒன்று நகர்ந்து சென்றிருப்பது, அந்நாட்டை பதற்றமடையச் செய்துள்ளது. இதுகுறித்து ஈரான், பல கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், அந்த மர்மப் பொருள் குறித்தும் விசாரணை நடத்திவருகிறது. மேலும், இதுதொடர்பாக அமெரிக்கா மீது ஈரான் சந்தேகம் கொண்டுள்ளது.
அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், செப்டம்பர் 20ஆம் தேதி, தெஹ்ரானில் உள்ள ஆசாதேகன் விரைவுச்சாலைக்கு அருகில் வானத்தில், பிரகாசமான, வண்ண விளக்குகள் ஒளியுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்து சென்றுள்ளது. அதற்கடுத்த நாளும், ஈரானின் ஜாஹேதான் பகுதியில் வானத்தில் விசித்திரமான ஒளியுடன் ஒரு பொருள் நகர்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மர்மப் பொருள் குறித்து பலரும், பலவாறு கருத்து தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, அது ஒரு மர்மமான ட்ரோனாகவோ அல்லது வேற்றுக்கிரகப் பொருளாகவோ இருக்கலாம் எனத் தெரிவித்த நிலையில், ஈரானிய இராணுவமோ அல்லது அரசாங்கமோ இதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதேநேரத்தில் இந்த மர்மப் பொருள்நிகழ்வு, TR-3B 'பிளாக் மான்டா' என்று அழைக்கப்படும் மிகவும் ரகசியமான அமெரிக்க விமானம் குறித்த ஊகங்களை எழுப்பியுள்ளது. அதாவது, இதுவரை யாரும் பார்த்திராத மற்றும் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த ஆயுதங்கள் அமெரிக்காவிடம் இருப்பதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
ஒருவேளை, இந்த மர்மப் பொருள்தான் அந்த 'பிளாக் மான்டா'வாக இருக்குமா என நம்பப்படுகிறது. இதையடுத்தே பல ஊகங்கள் கிளம்பியுள்ளன. 'பிளாக் மான்டா'வில், அதன் வேகம், திசை மற்றும் நிலையை விரைவாக மாற்றிக்கொள்ள உதவும் சிறப்பு உந்துவிசை அமைப்புகள் இருப்பதாகவும் ஊகிக்கப்படுகிறது. மேலும், அணுக்கரு வினைகள் மூலம் உருவாகும் பிளாஸ்மா, ஒரு வானூர்தியின் ரேடார் அடையாளத்தைக் குறைக்கவல்லது எனவும் கூறப்படுகிறது. இதனால் விமானத்தைக் கண்டறிவது கடினமாகி, அது நீண்டதூரம் பறக்கும் திறனைப் பெறும் என்று நம்பப்படுகிறது. ஆனால், அமெரிக்கா இதை ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை.
என்றாலும், இதற்கு முன்பும் இதேபோன்று வானத்தில் நகர்வது போன்ற மர்மப் பொருள் காணப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டு மத்திய தரைக்கடலில் ஒரு அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலில் இதேபோன்ற மர்மப் பொருளை நகரவிட்டதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்திருந்தன. தவிர, அதற்கு முன்பு 1976இலும் வானத்தில் ஒரு பிரகாசமான பொருளைக் கண்டதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் இதை விசாரிக்க ஈரான் F-4 ரகப் போர் விமானங்களை அனுப்பியபோதிலும், அந்தப் பொருளின் அடையாளம் ஒருபோதும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதனாலேயே, ஈரானுக்கு தற்போது 'பிளாக் மான்டா' விமானம் குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

