ஈரான் - அமெரிக்கா போர் பதற்றம்.. இந்தியர்களுக்குப் பிறந்த அதிரடி உத்தரவு!
ஈரான் - அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் பதற்றத்திற்கு மத்தியில், “ஈரானில் உள்ள இந்தியர்கள் கிடைக்கக்கூடிய போக்குவரத்து வழிகளைப் பயன்படுத்தி உடனே வெளியேற வேண்டும்” என தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் எச்சரித்துள்ளது.
ஈரான் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும், அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என அமெரிக்கா அழைப்பு விடுத்தது. அதையொட்டி, இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், அதில் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. தவிர, அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு எல்லாம் அடிபணிய மாட்டோம் என்றும் அவர்களின் ராணுவத்தையே அழிப்போம் என்றும் ஈரான் எச்சரித்தது. எனவே, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. அதற்கு முன்னெடுப்பாய் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா போர்க் கப்பல்களையும், போர் விமானங்களையும் குவித்து வருகிறது. இதற்கிடையே, ஒப்பந்தம் செய்யாவிட்டால் ஈரான் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் எந்த நேரத்திலும் அமெரிக்கா ஈரான் நாட்டை தாக்கலாம் என்ற பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில், இந்திய அரசு ஈரானில் இருக்கும் இந்திய குடிமக்களுக்கு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
“ஈரானில் உள்ள இந்தியர்கள் கிடைக்கக்கூடிய போக்குவரத்து வழிகளைப் பயன்படுத்தி உடனே வெளியேற வேண்டும்” என தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் எச்சரித்துள்ளது. அனைத்து இந்தியர்களும் எச்சரிக்கையாக இருக்கவும், போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளைத் தவிர்க்கவும், தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும் அது மேலும் வலியுறுத்தியுள்ளது. இந்தியர்கள் தங்கள் பயண மற்றும் குடியேற்ற ஆவணங்களை, பாஸ்போர்ட் மற்றும் அடையாள ஆவணங்கள் உட்பட, எல்லா நேரங்களிலும் எளிதாக அணுகக்கூடியதாக வைத்திருக்கவும், தேவைப்பட்டால் உதவிக்கு தூதரகத்தைத் தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மிக முக்கியமான அணுசக்தி பேச்சுவார்த்தை வரும் பிப்ரவரி 26 சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் மீண்டும் தொடங்க இருக்கிறது. ஓமன் நாடு முன்னின்று நடத்தும் இந்த மறைமுகப் பேச்சுவார்த்தையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

