ஈரான் மீது விரைவில் தாக்குதல்? ட்ரம்பின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் படைகள்!
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் இதற்கு அதிபர் ட்ரம்ப்பின் ஒப்புதல் மட்டுமே தேவை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் அணுஆயுத திறனை கட்டுப்படுத்துவது குறித்து அமெரிக்கா நடத்திய பேச்சுகள் பலன் தராத நிலையில் போர் தொடுப்பதில் உள்ள சாதக, பாதகங்களை ட்ரம்ப் பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானிய நாணயமான ரியாலின் ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு 16 லட்சமாக வீழ்ச்சியடைந்ததால் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி, கடந்த டிசம்பர் 28 முதல் ஈரான் மக்களைப் போராட்டக் களத்திற்குத் தள்ளியது. பின்னர் அது ஆட்சி மாற்றத்தைக் கோரும் அரசியல் போராட்டமாகத் தீவிரமடைந்தது. இதில் அமெரிக்காவின் ட்ரம்ப் அரசாங்கம் நேரிடையாகவே தலையிட்டது. அதேநேரத்தில், ஈரானிய அரசு எடுத்த ஒடுக்குமுறை நடவடிக்கைகளால் 6,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். போராட்டக்காரர்களை 'பயங்கரவாதிகள்' எனச் சாடிய அரசு, 40,000க்கும் மேற்பட்டோரையும் கைது செய்தது.
ஒட்டுமொத்தத்தில் போராட்டக்காரர்களை அடக்கி, தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டது. இதற்கிடையே, ஈரான் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும், அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டு என அமெரிக்கா அழைப்பு விடுத்தது. அதையொட்டி, இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், அதில் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. தவிர, அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு எல்லாம் அடிபணிய மாட்டோம் என்றும் அவர்களின் ராணுவத்தையே அழிப்போம் என்றும் ஈரான் எச்சரித்தது.
இதைத் தொடர்ந்து, அமெரிக்கா கடந்த 24 மணி நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட நவீன போர் விமானங்களை மேற்கு ஆசியா நோக்கி அனுப்பி வைத்துள்ளது. இவற்றில் F-22 ராப்டார் ஸ்டெல்த் போர் விமானங்கள், F-15 மற்றும் F-16 போர் விமானங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகளைத் தக்கவைக்கத் தேவையான KC-135 வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்கள் ஆகியவை அடங்கும். ஈரானை சுற்றியுள்ள வளைகுடா பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அப்பகுதியில் அமெரிக்க படைகளின் இருப்பு 2003ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் அதிகம் உள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழ் கூறியுள்ளது.
ஈரானின் அணுஆயுத திறனை கட்டுப்படுத்துவது குறித்து அமெரிக்கா நடத்திய பேச்சுகள் பலன் தராத நிலையில் போர் தொடுப்பதில் உள்ள சாதக, பாதகங்களை ட்ரம்ப் பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் இதற்கு அதிபர் ட்ரம்ப்பின் ஒப்புதல் மட்டுமே தேவை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

