ஈரான் - அமெரிக்கா பிடிவாதம்.. மீண்டும் போர் தொடருமா.. நாளை பேச்சுவார்த்தை.?
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் தாக்குதல்கள் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தற்காலிகமாக 2 வார காலத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு வார கால போர்நிறுத்தம் ஏப்ரல் 22, புதன்கிழமையன்று முடிவடைய உள்ளது. இதுவரை, இந்த போர்நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை. புதன்கிழமைக்குள் எவ்வித ஒப்பந்தமும் எட்டப்படாவிட்டால், போர் மீண்டும் தொடங்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று சூசகமாகத் தெரிவித்திருந்தார்.
அதேசமயம், நெருங்கி வரும் காலக்கெடுவிற்கு மத்தியில், இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். மற்றொரு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை; ஹார்முஸ் ஜலசந்தி மீதான முட்டுக்கட்டை தொடர்கிறது.
இந்தநிலையில் தான், ஈரானின் அணுசக்தி உரிமைகளைப் பறிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எந்த நியாயமும் இல்லை என்று ஈரான் கூறியுள்ளது . ஈரான் தனது அணுசக்தி உரிமைகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியாதா? என்றும் எந்தக் குற்றத்திற்காக அந்த உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்பதை அவர் குறிப்பிடவில்லை என்றும் ஒரு நாட்டின் உரிமைகளைப் பறிப்பதற்கு அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? என்றும் ஈரான் கேள்வி எழுப்பியுள்ளது .
மேலும், எதிரி தரப்பு ஏதேனும் தாக்குதல் நடத்தும் மறுகணமே பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான இறுதி ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து, இறுதிப் பேச்சுவார்த்தையை எட்டுவதற்கு நாங்கள் இன்னும் வெகு தொலைவில் இருக்கிறோம் என்று ஈரானின் பேச்சுவார்த்தையில் கலந்துக் கொண்டவர்களில் ஒருவரான முகமது பாகர் காலிபாஃப், கூறியுள்ளார். பேச்சுவார்த்தைகளில் நாங்கள் முன்னேற்றம் கண்டோம். ஆனால், பல இடைவெளிகள் உள்ளன. சில அடிப்படைக் கருத்து வேறுபாடுகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் திங்களன்று நடைபெறும் என்று சிஎன்என் செய்தி வெளியிட்ட போதிலும், பேச்சுவார்த்தையின் சரியான தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் பாதுகாப்பிற்காக பாகிஸ்தான் அதிகாரிகள் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளனர்.

