அபாய எச்சரிக்கை.. அமெரிக்காவின் வான்படை தளத்தை அடித்து நொறுக்கிய ஈரான்!
ஈரான், பஹ்ரைனில் அமெரிக்க ராணுவ வான்படை தளத்தை ட்ரோன்கள் மூலம் தாக்கி, வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கைகளை சவாலுக்கு உள்ளாக்கியுள்ளது. பாதுகாப்பு காரணமாக பஹ்ரைன் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
செய்தியாளர் - M.மீரா
ஈரான் மீது புதிதாக ராணுவத் தாக்குதல்களை நடத்தும் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக கூறியிருந்த நிலையில், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவக் கட்டமைப்புகளைக் குறிவைத்து 6 ட்ரோன்களை ஏவியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) தெரிவித்துள்ளது.
பஹ்ரைன் அமெரிக்காவுக்கு முக்கியமான ராணுவ மையமாக விளங்கி வருகிறது. அங்கு அமெரிக்கக் கடற்படையின் 5-ஆவது படைப்பிரிவின் தலைமையகம் செயல்பட்டு வருகிறது. வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தத் தளம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மேலும், ஏவுகணைகள் மற்றும் விமானங்கள் உள்ளிட்ட வான்வழி அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிவதில் ஆரம்ப எச்சரிக்கை ரேடார்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இந்நிலையில் பஹ்ரைனின் அல்-ரிஃபா பகுதியில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் அமைந்துள்ள அமெரிக்க வான் பாதுகாப்பு ரேடாரை குறிவைத்து இந்த ட்ரோன்கள் ஏவப்பட்டதாக IRGC தெரிவித்துள்ளது. மேலும், ட்ரோன்கள் திட்டமிட்ட இலக்குகளைத் தாக்கியதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்தத் தாக்குதலில் இதற்கிடையே, பஹ்ரைனின் தொழிற்பேட்டை பகுதியில் பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பஹ்ரைனில் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அங்கு எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும், அருகிலுள்ள பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. மேலும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டது.
பாதுகாப்பு காரணங்களுக்காக பஹ்ரைன் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது . மேலும் இது செப்டம்பருக்குப் பிறகு பஹ்ரைனில் முதல் முறையாக விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக, ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக IRGC கூறியுள்ளது. இந்தத் தாக்குதல்கள் குறித்து அமெரிக்காவும் பஹ்ரைனும் இதுகுறித்து உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
இவ்வாறு ஈரான் நேரடியாக வளைகுடா நாடுகளில் (Gulf Countries) உள்ள அமெரிக்காவின் ராணுவக் கட்டமைப்புகள் மற்றும் அதன் நட்பு நாடுகளின் எல்லைகளைத் தொடர்ந்து குறிவைத்துத் தாக்கி வருகிறது. முன்னதாக அமெரிக்க ராணுவம் பயன்படுத்தும் ஓமனின் துக்கம் (Duqm) மற்றும் சலாலா (Salalah) துறைமுகங்களை நோக்கியும், ஓமனுக்குச் சொந்தமான தீவுகள் மற்றும் கடல் எல்லைகளை நோக்கியும் ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகள் மீது அழுத்தம் கொடுப்பதன் மூலம், அமெரிக்க ராணுவத்தை இந்த பிராந்தியத்தை விட்டு வெளியேறச் செய்ய ஈரான் முயல்கிறது.
ஈரான் ஓமன் அல்லது பஹ்ரைன் நாடுகளுடன் நேரடியாகப் போர் தொடுக்கவில்லை. ஆனால், அந்த நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவச் சொத்துக்களையும், அமெரிக்கா பாதுகாக்கும் கடல்சார் வர்த்தகப் பாதைகளையும் ஒன்றன் பின் ஒன்றாகத் தகர்த்து, அமெரிக்காவிற்குப் பொருளாதார மற்றும் ராணுவ ரீதியான நெருக்கடியைக் கொடுத்து வருகிறது.

