அமைதி நிலவுவது இருக்கட்டும்; போரைத் தொடங்கியது யார்..? ஈரான் மறுப்பு.!
ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையிலான பதற்றம் நீடிக்கும் நிலையில், ட்ரம்ப் 10 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்தம் மற்றும் நேரடி பேச்சுவார்த்தை நடக்கிறது என கூறினார். ஆனால் ஈரான் வெளியுறவுத் துறை பேச்சாளர் இஸ்மாயில் பாகேய், எந்த நேரடி பேச்சுவார்த்தையும் இல்லை என மறுத்து, அமெரிக்கா அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றுகிறது என விமர்சித்தார். போரைத் தொடங்கியது யார் என்பதே முக்கியம் எனவும் அவர் எச்சரித்தார்.
ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் ஒரு மாதத்தை எட்டியிருக்கும் சூழலில், மத்தியக் கிழக்கில் தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் தான், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும், 10 நாட்களுக்கு ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தப்போவதாகவும் ட்ரம்ப் அறிவித்தார். எனினும், அமெரிக்கா, தரைவழித் தாக்குதலை தொடங்க கூடுதலாக 10 ஆயிரம் ராணுவ வீரர்களை மத்திய கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பி வருவதாகவும், ஐக்கிய அரபு அமீரகத்தின் உதவியுடன் ஈரான் மீது அமெரிக்கா ஒரு தரைவழித் தாக்குதல் நடத்த தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்திருந்த ட்ரம்ப், ஈரானுடன் நேரிடையாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது; விரைவில் ஒரு பயனுள்ள ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பிருக்கிறது எனத் தெரிவித்திருந்தார்.
இச்சூழலில் தான், ட்ரம்பின் இந்தக் கூற்றை ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், அமெரிக்கா தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக்கொள்வதாகவும், அமெரிக்காவின் இராஜதந்திரக் கூற்றுகளை அங்குள்ள மக்களே எவ்வளவு தூரம் தீவிரமாக எடுத்துக்கொள்வார்கள் என்பது சந்தேகமே என்றும் அவர் விமர்சித்தார். தொடர்ந்து, ஈரான் எவ்வித நேரடி பேச்சு வார்த்தைகளையும் அமெரிகாவுடன் நடத்தவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, அமெரிக்கா - ஈரான் இடையே நிரந்தர தீர்வை எட்டும் பேச்சுவார்த்தையை நடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் ஈஷாக் தார் தெரிவித்திருந்த நிலையில், பாகிஸ்தான் எடுத்து வரும் முயற்சிகள் அந்த நாட்டின் தனிப்பட்ட முயற்சி என்றும் அதில் ஈரான் நேரடியாகப் பங்கேற்கவில்லை என்றும் இஸ்மாயில் பாகேய் தெளிவுபடுத்தியிருக்கிறார். அதேபோல, பிராந்தியத்தில் போர் முடிவுக்கு வருவதில் அண்டை நாடுகளுக்கு அக்கறை இருப்பது நல்லது. ஆனால், இந்தப் போரைத் தொடங்கியது யார் என்பதில் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

