ஈரான் | அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்.. அமெரிக்கா தலையிட வலியுறுத்தல்!
ஈரானில் கமேனி அரசுக்கு எதிராக நடந்துவரும் மக்கள் போராட்டம் 3ஆவது வாரத்தை நெருங்கியுள்ளது.
ஈரானில் ரியால் மதிப்பு சரிவு, உணவுப் பொருள்கள் விலை உயா்வு உள்ளிட்ட காரணங்களைக் கொண்டு மக்கள் போராட்டங்களைத் தொடங்கிய நிலையில், அது தற்போது அரசுக்கு எதிராகப் பெரிய அளவில் உருவெடுத்துள்ளது. பொருளாதாரம் மற்றும் விலைவாசி உயர்வு தொடர்பாக டிசம்பர் 28இல் தொடங்கிய போராட்டம், கமேனி ஆட்சி மற்றும் ஊழலுக்கு எதிரான பரந்த போராட்டமாக விரைவாக உருமாறியுள்ளது. கடந்த காலத்தைப் போலல்லாமல், போராட்டக்காரர்கள் சீர்திருத்தத்தை மட்டும் நாடவில்லை, மாறாக இஸ்லாமிய குடியரசையே நிராகரிக்கின்றனர். அதனால் போராட்டத்தில், நாட்டின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக, ‘கமேனியே பதவி விலகு’, ‘சுதந்திரம் வேண்டும்’, ’கமேனிக்கு மரணம்’, ’பஹ்லவி திரும்புவார்’ என்பது போன்ற முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன. போராட்டத்தின் ஒரு பகுதியாக, 1979 புரட்சியின்போது தூக்கியெறியப்பட்ட ஈரானின் கடைசி ஷாவின் மகன் ரெசா பஹ்லவி திரும்ப வேண்டும் என்று ஒரு பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, கலவரக்காரா்களை ஒடுக்க வேண்டும் என்று கமேனி உத்தரவிட்டாா். அதன் தொடா்ச்சியாக இணையதள இணைப்பு தற்போது முடக்கப்பட்டுள்ளது. கைது நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, தலைநகா் டெஹ்ரான், இஸ்ஃபஹான், ஷிராஸ், தப்ரிஸ் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நகரங்களில் நேற்று போராட்டங்கள் தொடா்ந்தன. போலீஸாா் கண்ணீா்ப்புகை குண்டுகள், ரப்பா் குண்டுகள் பயன்படுத்தி ஆா்ப்பாட்டக்காரா்களைக் கலைத்தனா். எனினும், 14ஆவது நாளாக போராட்டக்காரர்கள் சாலைகளில் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வரும் நிலையில் பாதுகாப்பு படைகள் நடத்திய தாக்குதலில் இறந்தவர்கள் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. ஆயினும் 200 பேருக்கு மேல் இறந்திருப்பர் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 2,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த அரசு இணையதள சேவையை துண்டித்துள்ளது. அமைதியான போராட்டங்களில் எந்த தலையீடும் இருக்கக்கூடாது என ஐநா அறிவுறுத்தியுள்ளது.
இப்போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டுத் தூண்டுதல் உள்ளதாக ஈரான் அதிஉயர் தலைவர் கமேனி அமெரிக்காவை மறைமுகமாக குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கிடையே, ஈரானில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் வலுக்கும் நிலையில் அதில் தலையிடுமாறு அந்நாட்டு முன்னாள் இளவரசரான ரெஸா பெஹ்லவி அமெரிக்காவை கேட்டுக்கொண்டுள்ளார். ஈரானில் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதுடன் அவர்களுக்கு உதவும் வகையில் களமிறங்குவது குறித்து அமெரிக்கா உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று பெஹ்லவி ரெஸா எக்ஸ் சமூக தளம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். ஈரானில் இணையதள சேவை முடக்கப்பட்டு இளம் போராட்டக்காரர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதாகவும் ரெஸா பெஹ்லவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையே, போராட்டங்களுக்கு மத்தியில், ஈரானிய பெண்கள் உச்ச தலைவரின் எரியும் புகைப்படங்களிலிருந்து சிகரெட்டுகளை பற்றவைக்கும் படங்கள் வைரலாகி சமூக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இஸ்லாமிய நாட்டில், உச்ச தலைவரின் உருவப்படங்களை எரிப்பது சட்டத்தின்கீழ் கடுமையான குற்றமாகப் பார்க்கப்படுகிறது. பெண்கள், புகைபிடிப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, ஈரானியரான ஓமிட் சர்லாக், கமேனியின் புகைப்படத்திற்கு தீ வைப்பதைக் காட்டும் வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இருப்பினும், வீடியோ வெளியான சில மணிநேரங்களுக்குப் பிறகு, அவரது உடல் அவரது காருக்குள் கண்டெடுக்கப்பட்டது. ஆனாலும், பெண்கள் இப்படிச் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும், அரசு கட்டடங்களை எரிக்கும் போராட்டக்காரர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படும் என்று தெஹ்ரானின் தலைமை வழக்கறிஞர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், போராட்டக்காரர்கள் அரசுக்கு சவால் விடுவது மட்டுமல்லாமல், பெண்களுக்கு கடுமையான சமூகக் கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதை இந்தக் காட்சிகள் தெரிவிக்கின்றன. "இஸ்லாமிய ஆட்சிக்கு எதிரான புரட்சியை இளம் ஈரானிய பெண்கள் வழிநடத்துகிறார்கள்" என்று புவிசார் அரசியல் நிபுணர் டாக்டர் மாலூஃப் பதிவிட்டுள்ளார். எழுத்தாளரும் வழக்கறிஞருமான கிளே டிராவிஸ், "21 ஆம் நூற்றாண்டில் ஒரு அமெரிக்க பெண்ணியவாதி செய்த எதையும்விட இது துணிச்சலானது" என்று பதிவிட்டுள்ளார்.

