இனி விசா கட்டாயம்.. இந்தியர்களுக்கான சலுகையை நிறுத்திய ஈரான்.. காரணம் ஏன் தெரியுமா?
’நவம்பர் 22 முதல், சாதாரண பாஸ்போர்ட் கொண்ட இந்திய பயணிகள் விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ என ஈரான் தெரிவித்துள்ளது.
இந்தியாவும் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானும் எப்போதும் நல்ல ராஜதந்திர உறவுகளைக் கொண்டுள்ளன. ஈரான் சிறந்த கலாசார மற்றும் வரலாற்று பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதால், ஒவ்வோர் ஆண்டும் ஏராளமான இந்தியர்கள் அங்கு செல்கிறார்கள். அதன் காரணமாக, ஈரானில், இந்திய சுற்றுலாப் பயணிகள் சில நிபந்தனைகளின்கீழ் விசா இல்லாமல் அந்நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் ஆசிய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் ஈரான் இந்தச் சலுகையை வழங்கி இருந்தது.
இந்த நிலையில் விசா இல்லாத சலுகையை ஈரான் நிறுத்திவைத்துள்ளது. வரும் நவம்பர் 22 முதல், சாதாரண பாஸ்போர்ட் கொண்ட இந்திய பயணிகள் விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம், நாட்டிற்குள் நுழைய பயணத்திற்கு முன்பு முன்பு விசா பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
மேலும், ஈரானுக்குச் செல்ல விரும்பும் அனைத்து இந்தியர்களும் விழிப்புடன் இருக்கவும், விசா இல்லாத பயணம் அல்லது ஈரான் வழியாக மூன்றாம் நாடுகளுக்கு போக்குவரத்து வழங்கும் முகவர்களைத் தவிர்க்கவும் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்" என அது கேட்டுக் கொண்டுள்ளது. ’வேலைவாய்ப்பு வழங்குவதாகவோ அல்லது மூன்றாம் நாடுகளுக்குப் போக்குவரத்து வசதியை வழங்குவதாகவோ பொய்யான வாக்குறுதிகள் அளித்து இந்தியர்கள் ஈரானுக்கு ஈர்க்கப்பட்ட பல சம்பவங்கள் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன. சாதாரண இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்குக் கிடைக்கும் விசா தள்ளுபடி வசதியைப் பயன்படுத்தி, இந்த நபர்கள் ஈரானுக்குப் பயணம் செய்ய ஏமாற்றப்பட்டனர். ஈரானுக்கு வந்ததும், அவர்களில் பலர் மீட்கும் பணத்திற்காக கடத்தப்பட்டனர்’ என அது தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தப் புதிய விதிகளின்கீழ், இந்தியர்கள் இப்போது முன்கூட்டியே ஈரானிய விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் தங்கள் விமானங்களில் ஏறுவதற்கு முன்பு விசாவை வைத்திருக்க வேண்டும். கூடுதலாக, நாட்டிற்கு பயணம் செய்யாமல், மத்திய ஆசியாவின் பல நாடுகள் வழியாக போக்குவரத்து பாதையாக அதைப் பயன்படுத்தும் பயணிகளும் செல்லுபடியாகும் ஈரானிய விசாவைப் பெற வேண்டும். அனைத்து விமான நிறுவனங்களும் இப்போது தங்களுடன் பறக்கும் மக்களின் விசா நிலையை சரிபார்க்க அறிவுறுத்தப்படுகின்றன.

