ஈரான்| மொத்தமாக சிதைந்த அதிகாரம்.. 40 உயர் அதிகாரிகள் கொலை.. இனி என்ன நடக்கும்?
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் 40 உயர் அதிகாரிகள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இதனால் ஈரானில் 40 நாட்கள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. காமேனியின் மகன் மொஜ்தபா அடுத்த தலைவராக வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 36 ஆண்டுகளாக ஈரானின் உச்ச அதிகாரமாகத் திகழ்ந்த அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் அரசு ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.
ஈரானின் அணுசக்தி மையங்கள், உளவுத்துறை தலைமையகங்கள் மற்றும் பாதுகாப்பு உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு பிப்ரவரி 28ஆம் தேதி முதல் மிகத் தீவிரமான வான்வழித் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது Truth Social தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்காவின் அதிநவீன உளவு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளின் உதவியுடன் காமேனி இருக்கும் இடம் துல்லியமாகக் கண்டறியப்பட்டு வீழ்த்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். வரலாற்றின் மிகவும் தீய மனிதர்களில் ஒருவருக்குக் கிடைத்துள்ள நீதியாக இதனை வர்ணித்த டிரம்ப், ஈரானிய மக்கள் தங்கள் நாட்டை மீட்டெடுக்க இதுவே மிகச்சிறந்த வாய்ப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஒரு தொலைக்காட்சி உரையில், காமேனியின் வளாகம் தகர்க்கப்பட்டுவிட்டது என்றும், அவர் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
காமேனி உடன் 40 உயர் அதிகாரிகள் கொலை!
இந்தத் தாக்குதலில் காமேனியுடன் சேர்த்து ஈரானின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையைச் சேர்ந்த சுமார் 40 உயர் அதிகாரிகள் இத்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் உச்ச தலைவரின் தலைமை பாதுகாப்பு ஆலோசகர் அலி ஷாம்கானி, ஈரானின் பாதுகாப்புத் துறை மந்திரி அஜீஸ் நசீர்சாதே, மற்றும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) தளபதி முகமது பக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், காமேனியின் தலைமை ராணுவச் செயலாளர் முகமது ஷிராசி, ராணுவ உளவுத்துறைத் தலைவர் சலே அசாதி மற்றும் அணு ஆயுத ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் உசைன் ஜபல் அமிலியன் ஆகியோரும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
டெஹ்ரானில் உள்ள காமேனியின் இல்லம் மீதான தாக்குதலில் அவரது மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தை உள்ளிட்ட குடும்பத்தினரும் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தெற்கு ஈரானில் உள்ள ஒரு பெண் குழந்தைகள் பள்ளி மீது விழுந்த ஏவுகணையால் 108 சிறுமிகள் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
ஈரானில் தற்போது 40 நாட்கள் தேசியத் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த தலைவர் யார் என்பதில் பெரும் குழப்பம் நிலவுகிறது. காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி அடுத்த தலைவராக வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. இத்தாக்குதலில் தப்பிய மூத்த அதிகாரியான அலி லாரிஜானி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக "மறக்க முடியாத பாடம் புகட்டுவோம்" எனச் சபதம் செய்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, துபாய், தோஹா, பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே, ஈரானின் நாடுகடத்தப்பட்ட இளவரசர் ரேசா பஹ்லவி, மக்கள் வீதிக்கு வந்து தற்போதைய ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்றும், பாதுகாப்புப் படையினர் மக்களுடன் இணைய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். முழுமையான உலக அமைதி ஏற்படும் வரை குண்டுவீச்சு தடையின்றித் தொடரும் என அமெரிக்கத் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளதால், போர் சூழல் மேலும் உக்கிரமடைந்துள்ளது.

