ஈரானில் இணைய முடக்கம்.. தகவல் அறியும் உரிமை பறிப்பு!
ஈரானில் இணைய சேவை முடக்கம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களுக்கு இடையே அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் தகவல் அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஈரான் அரசு, அமெரிக்க மக்களை குறிவைத்து போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதும் பேசுபொருளாகியுள்ளது.
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாத நிலையில், இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதலைத் தொடுத்தன. இந்த தாக்குதலில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானை ஆட்சி புரிந்துவந்த அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இது, உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஈரான் அதிபர் பெசஷ்கியான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்குப் பதிலடி தராமல் ஓயமாட்டோம் எனத் தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில்தான், ஈரான் தனது பதிலடி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி எதிர்தாக்குதல் நடத்திவருகிறது. குறிப்பாக, ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங் என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கிய ஈரான், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், துபாய் மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தி சேதத்தை ஏற்படுத்தி வருகின்றது.
ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கவும் பதிலடி கொடுத்துவருகின்றன. ஈரான் உடனான போரால் அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் அதிகளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மாறி மாறி இருதரப்பும் தாக்குதல் நடத்திவரும் நிலையில், ஈரானில் இணைய சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானில் இணைய சேவை முடக்கம்..
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானில் நாடு தழுவிய இணைய முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. போர் தொடங்கி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், நாட்டின் இணைய சேவையில் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல்தொடர்பு முடக்கத்தால், வரவிருக்கும் தாக்குதல்கள் குறித்த எச்சரிக்கைகளை மக்கள் அறிய முடியாத நிலை உள்ளது. ஒருபுறம் தனது நாட்டு மக்களை இருட்டில் வைத்துள்ள ஈரான் அரசு, மறுபுறம் அமெரிக்க மக்களைக் குறிவைத்து இணையத்தில் போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதும் பேசுபொருளாகி உள்ளது.
ஈரானில் ஏற்பட்டுள்ள இணைய முடக்கம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் உலகளாவிய இணைய கண்காணிப்பாளர் நெட்பிளாக்ஸ், "ஈரானின் இணையத் தடை இப்போது 120 மணிநேரத்தைத் தாண்டியுள்ளது, இணைப்பு இன்னும் சாதாரண மட்டங்களில் 1% மட்டுமே உள்ளது" என தெரிவித்துள்ளது.
இந்த இணைய முடக்கத்தால், ஈரானுக்குள், கூகிள் மேப்ஸ் போன்ற வழிகாட்டும் கருவிகளைப் பயன்படுத்தி வாகனம் ஓட்டுவது அல்லது தகவல்களை இணையதளங்களில் சரிபார்ப்பது போன்ற எளிய வேலைகள் கூட சாத்தியமற்றதாகிவிட்டன. மிகவும் வரையறுக்கப்பட்ட உள்ளூர் இணைய இணைப்பு மட்டுமே கிடைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

