"பாலஸ்தீனத்தின் இருப்பை இஸ்ரேல் அங்கீகரிக்கும்வரை.." விளையாட்டில் எதிரொலித்த இஸ்ரேல் காசா போர்
இந்தோனேசியா, ஜகார்த்தாவில் நடைபெற இருக்கும் உலக கலை ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இஸ்ரேல் வீரர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியா, ஜகார்த்தாவில் உலக கலை ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. அக்டோபர் 19 முதல் 25 வரை நடைபெறும் இந்த நிகழ்வில் 79 நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டிகளில் இஸ்ரேல் நாட்டின் தடகள வீரர்கள் பங்கேற்பதற்கு அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”இப்போட்டிகளில் பங்கேற்க, இஸ்ரேலிய தடகள வீரர்களுக்கு விசா வழங்கப்படாது. தங்களது நாட்டுக்குள் இஸ்ரேலிய அணிக்கு அனுமதியில்லை” என இந்தோனேசியாவின் மூத்த சட்ட அமைச்சர் யுஸ்ரில் இஹ்சா மஹேந்திரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர், ”சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட பாலஸ்தீனத்தின் இருப்பை இஸ்ரேல் அங்கீகரிக்கும்வரை இஸ்ரேலுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளாது என்ற உறுதியான நிலைப்பாட்டை இந்தோனேசிய அரசாங்கம் கொண்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், குடிவரவு மற்றும் திருத்த அமைச்சர் அகஸ் ஆண்ட்ரியான்டோ, “இந்தோனேசியா இஸ்ரேலுடன் முறையான உறவுகளைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் இஸ்ரேலிய நாட்டினர் அல்லது இந்தோனேசியாவை தளமாகக் கொண்ட வணிகங்கள் அல்லது இந்தோனேசிய நாட்டினர் போன்ற அவர்களின் ஆதரவாளர்கள், ‘அழைப்பு விசா’ நடைமுறையின்கீழ் குறுகிய கால விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். இரட்டை பாஸ்போர்ட் வைத்திருக்கும் இஸ்ரேலிய பிரஜைகள் தங்கள் மற்ற பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி இந்தோனேசியாவிற்குள் நுழையலாம்” என்றார்.
மேலும், 6 இஸ்ரேலிய தடகள வீரர்களுக்கு விசா வழங்கக் கோரி இந்தோனேசிய ஜிம்னாஸ்டிக் கூட்டமைப்பு, சமர்பித்த கடிதத்தையும், அந்த அமைப்பு திரும்பப் பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த 2023 ஜூலை மாதம், இஸ்ரேலின் பங்கேற்பு குறித்த சர்ச்சையைத் தொடர்ந்து, தேசிய ஒலிம்பிக் கமிட்டிகள் சங்கத்தின் (ANOC) உலக கடற்கரை விளையாட்டுகளை நடத்துவதில் இருந்து இந்தோனேசியா விலகியது.
அந்த ஆண்டு மார்ச் மாதம், இஸ்ரேல் பங்கேற்பதற்கு இரண்டு ஆளுநர்கள் ஆட்சேபனை தெரிவித்ததை அடுத்து, இந்தோனேசியா 20 வயதுக்குட்பட்டோருக்கான FIFA உலகக் கோப்பையை நடத்தும் உரிமையை இழந்தது. காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்து இந்தோனேசியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், அந்நாட்டின் விளையாட்டு அணியை உலக நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.