இந்தியா, போலந்து உறவில் மெகா DEAL! இரு பிரதமர்கள் எடுத்த முடிவு என்ன?
இந்தியா மற்றும் போலந்து உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல இரண்டு நாட்டு பிரதமர்களும் முடிவு செய்துள்ளனர். பிரதமர் மோடி மற்றும் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன? இந்தியாவுக்கு இதில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது? பார்க்கலாம்
அக்டோபர் 21 முதல் 23-ம் தேதி வரை போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் அக்டோபர் 22-ம் தேதி மோடியும் டொனால்ட் டஸ்க்கும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதாகும்.
இந்தியா போலந்து இடையிலான ஆண்டு வர்த்தகம் தற்போது 6 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இதை 2030 க்குள் 12 பில்லியன் டாலராக உயர்த்துவதே இலக்காகும். இந்தியாவிலிருந்து மருந்துகள், ரசாயனங்கள், ஜவுளி, பொறியியல் பொருட்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியை அதிகரிப்பதுடன், இந்தியாவில் போலந்து நிறுவனங்களின் முதலீடுகளையும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், போலந்தை மையமாகக் கொண்டு மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பியச் சந்தைகளில் இந்திய நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் வாய்ப்புகள் உள்ளன.
இந்த வர்த்தக வளர்ச்சிக்கு, இந்தியா ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தமும் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தை விரைவாகக் கையெழுத்திட்டு, நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இரு தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர். ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால் இந்தியப் பொருட்களை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது எளிதாகி இதன் மூலம் இந்திய நிறுவனங்களுக்குப் புதிய சந்தை வாய்ப்புகளும், முதலீடுகளை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் உருவாகும்
வர்த்தகத்தைத் தாண்டி, பாதுகாப்புத் துறையிலும் புதிய partnership -யை உருவாக்க இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன. இதற்காக Defence Industry Dialogue என்ற பேச்சுவார்த்தை அமைப்பை உருவாக்க முன்மொழியப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்புத் தொழில்நுட்ப ஆராய்ச்சி, இணைந்து தொழில்நுட்பங்களை உருவாக்குதல் போன்றவற்றுக்கான வாய்ப்புகளை இரு நாடுகளும் ஆராய உள்ளன.
அடுத்ததாக விண்வெளி, அணுசக்தி, செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர் சிப் மற்றும் குவாண்டம் தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் இணைந்து செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மின்சார வாகனங்கள் மற்றும் மின்னணுப் பொருட்கள் தயாரிப்புக்குத் தேவையான முக்கியக் கனிமங்களைச் சுத்திகரித்தல், பேட்டரிகளை மறுசுழற்சி செய்தல் போன்ற துறைகளிலும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவுள்ளன.
சர்வதேச அளவிலும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள போலந்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்தவும், அதில் இந்தியாவுக்கு இடம் கிடைக்கவும் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், 2028–29 காலத்துக்கான பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிக்கான இந்தியாவின் முயற்சிக்கும் ஆதரவு அளித்துள்ளது.
இந்தச் சந்திப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவதுடன் பாதுகாப்பு, முக்கியக் கனிமங்கள், புதிய தொழில்நுட்பங்கள், முதலீடு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு எனப் பல துறைகளில் இந்தியா போலந்து உறவை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த இலக்குகள் எந்த அளவுக்கு நடைமுறை ஒப்பந்தங்களாகவும் வர்த்தக வளர்ச்சியாகவும் மாறும் என்பது கவனிக்க வேண்டிய விஷயமாகும்.
