கச்சா எண்ணெய் விவகாரத்தில் புதிய சிக்கல்.. மேற்காசியப் போருக்குப் பின் அடுத்த அதிர்ச்சி
மேற்காசியப் போருக்கு பின் கச்சா எண்ணெய் விலை உயர்வு உலக நாடுகளை பாதித்து வரும் நிலையில் அதன் போக்குவரத்துக் கட்டணங்கள் அதைவிட விகிதாச்சார அளவில் அதிகரித்துள்ளது, இது குறித்த விரிவான அலசலை பார்க்கலாம்
மேற்காசியாவில் 8 மாதங்களாக நிலவி வரும் போர்ப் பதற்றம் எண்ணெய்ப் போக்குவரத்தையும் பாதித்துள்ளது. உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கியத்துவம் மிக்க ஹோர்முஸ் நீரிணை, பாப் எல் மந்தப் நீரிணை பகுதிகளில் அவ்வப்போது தாக்குதல் நடந்துவருவதால் எண்ணெய் கொண்டுவருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல கப்பல்கள் 8 ஆயிரம் கிலோ மீட்டர்கள் வரை மாற்றுப் பாதையில் சுற்றி வருகின்றன. கப்பல்கள் அதிக நாட்களுக்கு நீண்டதொலைவுக்கு பயணிக்க வேண்டியிருப்பதால் எண்ணெய்யை விரைவாகக் கொண்டுவருவதிலும் சிக்கல்கள் நிலவுகிறது.
இந்தப் பிரச்சினைகளைத் தவிர்க்க சில கப்பல்கள் தாக்குதல் அச்சத்தையும் மீறி துணிச்சலுடன் போர்ப் பதற்ற பகுதி வழியே எண்ணெய் கொண்டுவரும் நிலையில் அவற்றின் காப்பீட்டுக் கட்டணங்கள் பன்மடங்கு உயர்ந்துள்ளன. பெரும்பாலும் இந்தியா, ஜப்பான், சீனா உட்பட பல்வேறு நாடுகள் தொலைதூரங்களில் உள்ள சந்தைகளில் இருந்து கொண்டுவர வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்துக் கட்டணங்களும் வெகுவாக உயர்ந்துள்ளன.
ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யப் போக்குவரத்துச் செலவு 3 டாலராக இருந்த நிலையில் அது இப்போது 20 டாலராக அதிகரித்துவிட்டதாக கூறுகிறது கோல்டுமேன் சாக்ஸ் ஆய்வறிக்கை. கச்சா எண்ணெய் விலையில் 3% ஆக இருந்த போக்குவரத்துச் செலவு தற்போது 25% ஆக அதிகரித்துவிட்டதாக கூறுகிறது ஜெஃப்ரிஸ் ஆய்வறிக்கை. கச்சா எண்ணெய் விலையுடன் போககுவரத்துச் செலவுகளும் அதிகரித்துள்ளதால் பெட்ரோல் விற்பனையில் 28 ரூபாயையும் டீசல் விற்பனையில் 36 ரூபாயையும் எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை சந்திப்பதாகக் கூறுகிறது ஜெஃப்ரிஸ் ஆய்வறிக்கை. மேற்காசியப் பதற்றச் சூழல் நீடித்தால் இந்தியர்கள் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
