துபாய் | சொத்துகள் வாங்க ஆர்வம் காட்டும் இந்தியர்கள்!
துபாயில் இந்தியர்கள் வேலைக்காக அதிகளவில் செல்லும் நிலையில் இதன் அடுத்த முன்னேற்றமாக அங்கு சொத்துகளை வாங்குவதும் அதிகரித்துள்ளது. துபாயில் இந்தியர்கள் பலர் வீடுகளை முதலீட்டு நோக்கில் வாங்கி வருகின்றனர். வாடகை வருமானம் அதிகமாக கிடைப்பது, வரி, ஸ்டாம்ப் செலவு போன்ற கூடுதல் செலவுகள் எதுவும் இல்லாதது, எளிய நடைமுறைகள் போன்றவை துபாயில் சொத்து வாங்க இந்தியர்களை ஈர்ப்பதாக கூறப்படுகிறது. மேலும் 20 லட்சம் திர்ஹாமுக்கு மேல் துபாயில் சொத்து வைத்திருப்பது அங்கு கோல்டன் விசா கிடைக்கவும் காரணமாக இருப்பது இதற்கு மற்றொரு முக்கிய காரணமாக உள்ளது.
இந்திய பெரு நகரங்களுக்கு இணையாக அல்லது அதற்கு குறைவாக துபாயில் வீடுகள் விலை இருக்கும் நிலையில் அதை நம்பிக்கையுடன் வாங்கும் போக்கு அதிகமாக உள்ளது. புனே, சூரத் போன்ற நகரங்களில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் கூட துபாயில் வீடு வாங்கி வாடகைக்கு விடுவதாக தகவல்கள் உள்ளன. துபாயில் வீடுகளை விற்பனை செய்வதற்காக இந்தியாவில் பெரும் சந்தையே உருவாகி வருகிறது. இனி விளம்பரங்களில் சென்னைக்கு மிக அருகில் என்ற நிலை மாறி துபாய்க்கு மிக அருகில் என்ற நிலை கூட வரலாம்.