ஹவுஸ் மேனேஜர் பதவி.. மாதம் ரூ.7 லட்சம் சம்பளம்.. அறிவிப்பு வெளியிட்ட துபாய் ஏஜென்சி!
அதிக சம்பளம் பெறும் நோக்கில், ஆண்களும் பெண்களும் வெளிநாடுகளுக்குப் படையெடுத்து வருகின்றனர். அதேநேரத்தில், உரிய வேலை கிடைக்காமலும், அதிக சம்பளம் கிடைக்காமலும் சில நபர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில் துபாயில் செயல்படும் பிரபல வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று, வீட்டு மேலாளர் பதவிக்கு ரூ.7 லட்சம் மாதச் சம்பளமாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருப்பது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. அதன்படி பார்த்தால், இது ஆண்டுக்கு ரூ. 83 லட்சமாகும்.
மேலும், இது இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் நிதித் துறைகளில் உள்ள பெரும்பாலான மூத்த அதிகாரிகளின் சம்பள தொகுப்புகளுக்கு போட்டியாக உள்ளது. எனினும், இந்த அறிவிப்பு நிஜமான வேலைவாய்ப்புதான் என்றும், சம்பள விகிதத்தில் எந்த மிகைப்படுத்துதலும் இல்லை எனவும் நிறுவனம் உறுதிபடக் கூறியுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு துபாய் மற்றும் அபுதாபியைச் சேர்ந்த 2 விஐபி குடும்பங்களுக்கு ஆகும். இந்தப் பணியில் சேருபவர்கள் வீட்டுப் பணியாளர்களை மேற்பார்வையிட வேண்டும். வீட்டுப் பராமரிப்புப் பணிகளை ஒழுங்குபடுத்துதல், செலவு திட்டம் மற்றும் நிதி நிர்வாகம், குடும்ப நிகழ்ச்சிகளை திட்டமிடுதல் உள்ளிட்டவை அடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் உயர்தர வீட்டு நிர்வாக அனுபவமுள்ளவர்கள் மற்றும் பல வேலை அழுத்தங்களுக்கு இடையிலும் நேர்த்தியாகச் செயல்படக்கூடியவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகிவரும் நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது பதிவு!