அமெரிக்கா|பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சோகம்..தன் வினையால் துப்பாக்கி குண்டுக்கு இரையான இந்திய மாணவர்!
கடந்த காலங்களில், அமெரிக்காவில் இந்தியர்களின் மரணங்கள் அதிகரித்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில், தற்போதும் ஒரு மரணம் நிகழ்ந்துள்ளது. இதில், இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் தனது பிறந்த நாள் கொண்டாத்தின்போதே இறந்ததுதான் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் உப்பால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆர்யன் ரெட்டி. இவரது குடும்பம் புவனகிரியில் வசித்து வந்துள்ளது. 23 வயதான இவர், அமெரிக்காவின் ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் உள்ள கன்சாஸ் பல்கலையில் சேர்ந்து, முதுகலை பட்டப்படிப்பில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில், அவர், கடந்த நவம்பர் 13ஆம் தேதி தன்னுடைய பிறந்த நாள் நண்பர்களுடன் கொண்டாடி உள்ளார். இந்தக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, அவர் வேட்டைக்கு பயன்படுத்தப்படக்கூடிய துப்பாக்கியைச் சுத்தப்படுத்தியுள்ளார்.
எதிர்பாராத விதமாக அந்த துப்பாக்கியில் இருந்த குண்டு அவரது மார்பில் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்தார். சத்தம் கேட்டு வந்த நண்பர்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆர்யனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஆர்யன் உயிரிழந்துவிட்டதாக கூறினர். ஆர்யன் ரெட்டியின் உடல் இன்று இரவு அவரது சொந்த ஊருக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.