அமெரிக்கா | பெட்ரோல் பங்கில் வேலை செய்த இந்திய மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரம்!
கடந்த காலங்களில், அமெரிக்காவில் இந்தியர்களின் மரணங்கள் அதிகரித்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில், தற்போதும் ஒரு மரணம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் தெலுங்கானாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ஆயுதம் ஏந்திய நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாய் தேஜா நுகராபு. 22 வயதான இவர், இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்தபின்பு, எம்.பி.ஏ. படிப்பதற்கா அமெரிக்கா சென்றார். அங்கு படித்தபடியே, ஓய்வுநேரத்தில் வருமானத்திற்காக, சிகாகோ நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலைசெய்து வந்தார். இந்த நிலையில்தான், நேற்று ஆயுதம் ஏந்திய நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
எனினும், இந்தச் சம்பவத்தின்போது அவர் பணியில் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தெலங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, கடந்த வாரம் இதே தெலங்கானா மாநிலம் உப்பால் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்யன் ரெட்டி என்பவர் முதுகலைப் படிப்புக்காக அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடிய தினத்தன்றே, தாம் வேட்டைக்கு பயன்படுத்தப்படக்கூடிய துப்பாக்கியைச் சுத்தப்படுத்தியபோது, அது எதிர்பாராதவிதமாக வெடித்ததில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.