சிங்கப்பூருக்கு அருகில் தனி தீவை வாங்கிய இந்தியர்! புதிய நாடு உருவாக்கத் திட்டம்!
சிங்கப்பூருக்கு அருகில் உள்ள தனியார் தீவை, இந்தியாவில் பிறந்த தொழில்நுட்ப முதலீட்டாளர் பாலாஜி ஸ்ரீனிவாசன் வாங்கியுள்ளார். அங்கு நெட்வொர்க் ஸ்டேட் என்ற பெயரில் ஒரு புதிய நாடு ஒன்றை உருவாக்குவதே இவரது நோக்கமாகும். இது தொழில்நுட்ப நிபுணர்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனத் தலைவர்கள் மற்றும் எதிர்கால டிஜிட்டல் குடியுரிமைக்கான மேடையாக அமைய இருக்கிறது. திட்டத்தின் முதல்கட்டமாக, அந்தத் தீவில் நெட்வொர்க் ஸ்கூல் என்ற பெயரில் மூன்று மாதங்களுக்கான பயிற்சித் திட்டம் நடத்தப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு, உடற்கல்வி, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் ஆளுமை வளர்ச்சி போன்ற தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பாலாஜி ஸ்ரீனிவாசன் காயின்பேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும், தி நெட்வொர்க் ஸ்டேட் என்ற பிரபல புத்தகத்தின் ஆசிரியராகவும் உள்ளார். அவரது முயற்சி உலகளாவிய தொழில்நுட்ப, கல்வி மற்றும் அரசியல் சமூகங்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.